Asianet News TamilAsianet News Tamil

பிபிசி பஞ்சாபி ட்விட்டர் கணக்கு முடக்கம்: அம்ரித்பால் சிங் பற்றிய செய்தி எதிரொலி?

அம்ரித்பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை முயன்றுவரும் நிலையில், 'பிபிசி பஞ்சாபி' அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

BBC Punjabi banned in India following Punjab crackdown reportage
Author
First Published Mar 28, 2023, 2:38 PM IST

காலிஸ்தான் ஆதரவாளரும் வாரிஸ் பஞ்சாப் டி தலைவருமான அம்ரித்பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை முயன்றுவரும் நிலையில், அதுபற்றி செய்தி வெளியிட்ட பிபிசி செய்தி நிறுவனத்தின் 'பிபிசி பஞ்சாபி' ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

பிபிசி செய்தி நிறுவனத்தின் 'பிபிசி பஞ்சாபி' அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அரசின் சட்ட கோரிக்கையை அடுத்து பிபிசி பஞ்சாபி கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட கோரிக்கையில் என்ன குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடப்படவில்லை.

ட்விட்டர் நிறுவனத்திற்கு கோரிக்கை அனுப்பியது மத்திய அரசா மாநில அரசா என்ற தகவலும் வெளியாகவில்லை. இதுமட்டுமின்றி சில நாட்களாகவே, பஞ்சாபை சேர்ந்த 24க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வாரிஸ் பஞ்சாப் டி என்ற காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங், கடந்த மாதம் அங்குள்ள காவல் நிலையத்தைச் சூறையாடினார். தங்கள் கூட்டாளிகளில் ஒருவரை சிறையிலிருந்து விடுவித்துச் சென்றார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த பஞ்சாப் போலீசார், அவர்களை கைது செய்ய நடவடிக்கையைத் தொடங்கினர்.

இதுவரை அம்ரித்பால் சிங் கூட்டாளிகள் பலரை கைது செய்துள்ளபோதும், அம்ரித்பால் சிங்கை பிடிக்க முடியவில்லை. அவர் நேபாளத்திற்குத் தப்பிச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய பாஸ்போர்ட் அல்லது போலி பாஸ்போர்ட் மூலம் அவர் நேபாளத்துக்குள் நுழைவது தெரிந்தால், உடனே கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க இந்தியத் தூதரகம் நேபாள குடியேற்றத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

செய்தியாளர்கள் ட்விட்டர் பக்கம் முடக்கம் குறித்து அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் சீக்கிய புலம்பெயர் குழுக்கள் போன்ற பல மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. பஞ்சாபில் இணைய சேவைகள் நிறுத்தம் பற்றியும் இந்த அமைப்புகள் கவலைகயை வெளிப்படுத்தியுள்ளன.

பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு சனிக்கிழமை இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை நிறுத்தி வைத்தது. இது முதலில் திங்கள்கிழமை நண்பகல் வரை அறிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் செவ்வாய் கிழமை வரையும் நீட்டிக்கப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios