இன்று நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கி உள்ளது.
தொடங்கியது பாரத் பந்த் :
மத்திய அரசுக்கு எதிராக அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு நடத்தும் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக நாடு முழுவதும் 2 நாட்கள் போக்குவரத்து, வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
போக்குவரத்துக்கு பாதிப்பு :
சென்னையில் பந்த் காரணமாக பேருந்துகள் சரிவர இயங்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காலை நேர பேருந்துகள் இயக்கப்படாததால் அவதிப்பட்டனர். பாரிமுனை, அண்ணாநகர், வடபழனி, தியாகராய நகர், பெரம்பூரில் 90 % பேருந்துகள் இயங்கவில்லை. மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதால் அதில் பயணிக்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

பந்த் கரணமாக தமிழகம் முழுவதும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம், விருதுநகர், திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் பெருமளவில் பயணிகள் காத்துக் கிடக்கின்றனர்.குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
முடங்கிய வங்கிச்சேவை :
இதன்காரணமாக, ஆட்டோக்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும், குறைந்த அளவிலான ஆட்டோக்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மேலும் இன்றும், நாளையும் வங்கி சேவை மேலும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது. ஏற்கனவே 2 நாள் விடுமுறை என்பதால் எடிஎம்மில் பணம் நிரப்பும் பணி நடக்கவில்லை. இன்றும் பணம் போடப்படாது என்பதால் ஏடிஎம் சேவை முடங்கும் வாய்ப்பு உள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
போராட்டத்தில் அரசு ஊழியர்கள் :
சென்னையை பொறுத்தவரை இன்று 11 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். மத்திய, மாநில அரசின் எச்சரிக்கையையும் மீறி அரசு ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதால் அரசு பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
