பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக தற்போதுள்ள 27 பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைத்து 12 வங்கிகளாக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  வங்கிகள் இணைப்பை கைவிட கோரி செப். 26, 27 தேதிகளில் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

இதற்கிடையே ‘‘26–ந்தேதியில் இருந்து அக்டோபர் 2–ந்தேதி வரையிலும் தொடர்ச்சியாக வங்கி சேவைகளை பெற முடியாது. ஆகவே முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுங்கள்’’ என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது.

இதனை வங்கி அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். 26–ந்தேதி முதல் 29–ந்தேதி வரையிலான 4 நாட்கள் மட்டுமே வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்றும், திங்கட்கிழமை (30–ந்தேதி) (வங்கி அரை வருட கணக்கு முடிவு) மற்றும் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 1–ந்தேதி) வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 2–ந்தேதி காந்தி ஜெயந்தியையொட்டி வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

அடுத்த வாரம் பெரும்பாலான வங்கிகள் 3 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் என்பதால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. காசோலைகள் மட்டும் தேக்கம் அடையாது. ஏ.டி.எம். எந்திரங்களிலும் பணம் நிரப்பப்படாது என்பதால் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு கடும் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்று தெரிகிறது.