ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு வெளியான பின் வங்கிகளில் சந்தேகத்துக்கு வரிய வகையில், ரூ. 4.17 லட்சம் கோடிடெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 18 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, அவர்கள் இம்மாத இறுதிக்குள் பான்கார்டு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யாவிட்டால், அனைத்து கணக்குகளையும் முடக்க வருமானவரித்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து கருப்பு பணத்தை வைத்து இருப்பவர்களை கண்டுபிடிக்க வருமான வரித்துறையினர் முடுக்கி விடப்பட்டனர்.
கடந்த 3 மாதங்களாக நடத்தப்பட்டு வரும் சோதனையில் கோடிக்கணக்கில் பணம் , நகைகள், கணக்கில் வராத சொத்துக்கள் வருமானவரித்துறையினரிடமும், அமலாக்கப்பிரிவினரிடமும் சிக்கி வருகிறது.
அதுமட்டும் அல்லாமல், ரூபாய் நோட்டு தடைக்கு பின், வங்கிக்கணக்கில் ரூ. 3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சந்தேகத்துக்கு இடமான வகையில் செய்யப்பட்ட டெபாசிட்கள் குறித்தும் வருமானவரித்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சந்தேகத்துக்கு இடமானவகையில், 18 லட்சம் வங்கிக்கணக்குகளில், ரூ.4.17 லட்சம் கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் தொடர்பாக ஏற்கனவே 18 லட்சம் பேரிடம் விளக்கம் கேட்டு இமெயில், எஸ்.எம்.எஸ். மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இவர்களுக்கு 10 நாள் காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் தங்களின் பான்கார்டு விவரங்கள், உள்ளிட்ட வருமான வரித்துறையினர் கேட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

அதை செய்யத் தவறினால், இந்த 18லட்சம் வங்கிக் கணக்குகளையும் முடக்கி வருமானவரித்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள். இந்த 18 லட்சம் பேரின் வங்கிக்கணக்கில் செய்யப்பட்ட டெபாசிட்களுக்கும், அவர்களின்வருமானத்துக்கும் தொடர்பு இல்லை.
அதனால்தான் வங்கிக்கணக்கு முடக்கத்தை, ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுடன் செய்ய வருமான வரித்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதில் குறிப்பாக ரூ. 2. லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை பணம் டெபாசிட்களுக்கு பெரும்பாலும் ஒரே பான்கார்டு எண் பயன்படுத்துப்பட்டுள்ளது, வருமான வரித்துறையினருக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், அடுத்த கட்டமாக தங்களின் கவனத்தை, தபால்நிலையங்கள் மூலம் செய்யப்பட்ட டெபாசிட்கள் மீது விசாரணை செய்ய வருமான வரித்துறையினர் திட்டமி்ட்டுள்ளனர்.
