பெங்களூரில் ஆங்கிலம் மற்றும் கன்னட பத்திரிக்கைகளில் மதவாதத்துக்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்த பெண் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூர் ராஜேஷ்வரி நகரில் வசித்து வந்தவர் பத்திரிக்கையாளரான கௌரி லங்கேஷ். இவர் லங்கேஷ் பத்திரிகே என்ற கன்னட பத்திரிக்கையை நடத்தி வருவதோடு ஆங்கிலம் மற்றும் கன்னட பத்திரிக்கைகளில் தொடர்ந்து மதவாதத்துக்கு எதிரான கருத்துக்களை விமர்சித்து எழுதி வந்தார். 

இது தொடர்பாக அவருக்கு பல கொலை மிரட்டல்களும் வந்த வண்ணம் இருந்தன. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாத கௌரி லங்கேஷுக்கு எதிராக பாஜக நிர்வாகிகள் சிலர் அவர்மீது கிரிமினல் அவதூறு வழக்கை தொடர்ந்தனர். 

இந்த வழக்கில் கௌரி லங்கேஷுக்கு கர்நாடக நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்ததோடு 6 மாத சிறை தண்டைனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. 

இதையடுத்து ஜாமினில் வெளியே வந்த கௌரி லங்கேஷுக்கு மீண்டும் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. 

இந்நிலையில், கௌரியின் வீட்டினுள் புகுந்த 4 பேர் அவரை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் கௌரி லங்கேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கௌரி லங்கேஷுக்கு ஏற்கனவே கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்ததால் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.