குஜராத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவா மாநில காங்கிரஸின் மகளிர் அமைப்பு, பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோருக்கு வளையல் அனுப்பும் போராட்டத்தை நடத்தி உள்ளனர்.

குஜராத்தில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடந்த வௌ்ளிக்கிழமை பார்வையிட்டார். அப்போது, பனஸ்கந்தா மாவட்டத்தில் வந்தபோது, ராகு காந்தியின் கார் மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்தினார். இதில் கார் கண்ணாடி உடைந்தது. இது தொடர்பாக குஜராத் போலீசார், ஜெயேஷ் தர்ஜி என்ற அணில் ரத்தோடு என்பவரை கைது செய்தனர்.

இதில் அணில் ரத்தோடு என்பவர் பா.ஜனதாவின் இளைஞர் அமைப்பு பாசறை அமைப்பைச் சேர்ந்தவர் ஆவர். இந்நிலையில், ராகுல்காந்தி கார் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் வளையல் அனுப்ப, கோவா மாநில மகளிர் காங்கிரஸ் தொண்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து கோவா மாநில மகிளா காங்கிரஸ் குழுவின் தலைவர் பிரதிமா கோட்டினோ கூறுகையில், “எங்கள் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட வளையல்களை பிரதமர் மோடிக்கும், பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கும், கல் எறிந்தவர்களுக்கும் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டுவரும் ஒருவரை கல் எறிந்து தாக்குவது கோழைத்தனமானது. இந்தியா என்பது ஜனநாயக நாடு. யார் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாகச் செல்லலாம்.

பா.ஜனதாவுக்கு காந்தியின் குடும்பம் நாட்டுக்காக எந்த அளவுக்கு தியாகங்களை செய்தார்கள் என்பதை தெரிந்து இருக்க வேண்டும், இந்த தாக்குதல்களைக் கண்டு அஞ்சமாட்டோம்’’ என்று தெரிவித்தார்.