நாங்க இருக்கோம்.. விமான பயணிகளுக்கு கைகொடுத்த ஏர் இந்தியா.. இனி நோ கவலை!
இண்டிகோ விமான ரத்துகளால் ஏற்பட்டுள்ள பயணிகளின் சிரமங்களைக் குறைக்க, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முக்கிய நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பயணிகளுக்கு தடையற்ற சேவை வழங்கப்படுகிறது.

ஏர் இந்தியா சலுகை
இந்தியன் ஏர்லைன்ஸ் துறையில் இண்டிகோ விமான ரத்துகளால் பெரும் குழப்பம் உருவாகியுள்ள நிலையில், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு முக்கிய நிவாரண அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிக்கலில் சிக்கிய நிலையில், இந்த இரண்டு நிறுவனங்களும் பயணத்தை எளிதாக்க பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. டிக்கெட் விலை திடீரென அதிகரிக்காமல் இருக்க, டிசம்பர் 4 முதல் உள்நாட்டு எகனாமி வகை விமானங்களுக்கான விலைகளுக்கு நிலையான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 6 அன்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை வெளியிட்ட புதிய கட்டுப்பாடு விதிமுறைகளையும் ஏர் இந்தியா பின்பற்றுகிறது. பயணிகளுக்கு நன்மையாக, டிக்கெட் தேதியை மாற்றும் கட்டணமும் (மறு அட்டவணை கட்டணம்) ரத்து செய்யும் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 வரை எந்த ஏர்லைனிலாக இருந்தாலும், டிசம்பர் 15க்குள் பயணம் செய்ய டிக்கெட் எடுத்தவர்கள் தங்கள் பயண தேதியை மாற்றிச் செல்லலாம்; எந்த rescheduling கட்டணம் கூட வராது. கூடவே, விரும்பினால் டிக்கெட்டை ரத்து செய்தாலும் ரத்து கட்டணம் இன்றி முழுத் தொகையும் திருப்பி வழங்கப்படும்.
இண்டிகோ நெருக்கடி
இந்த சலுகை ஒருமுறை மட்டுமே கிடைக்கும், டிசம்பர் 8க்குள் மாற்றம் அல்லது ரத்து செய்யப்பட்டால் மட்டுமே இது செல்லும். புதிய பயண தேதிக்கான கட்டணம் பழையதை விட அதிகமாக இருந்தால், அந்த வேறுபட்ட தொகையை மட்டுமே செலுத்த வேண்டும். அதே நேரத்தில், பயணிகள் புகார்கள் மற்றும் அழைப்புகள் அதிகரித்ததால், ஏர் இந்தியா கூடுதல் பணியாளர்களை தனது வாடிக்கையாளர் சேவை மையத்தில் நியமித்துள்ளது. 24/7 கால் சென்டர் மற்றும் பயண முகவர்கள் வழியாக பயணிகள் தங்கள் முன்பதிவுகளை மாற்றிக் கொள்ளலாம் அல்லது ரத்து செய்யலாம்.
சூழ்நிலையை சீர்படுத்தும் நோக்கில், சில முக்கிய பாதைகளில் கூடுதல் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன, சில ஏற்கனவே உள்ள சேவைகளில் கூடுதல் இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்கள், முதியவர்கள், ராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே இருந்த சலுகை கட்டண திட்டங்கள் ஏர் இந்தியா வலைத்தளம் மற்றும் மொபைல் ஆப்பில் தொடரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பல பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் பயண வாய்ப்புகள் இருக்கும்.

