பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளை அடுத்து இந்தியா முழுவதும் வருமான வரித்துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
இதனை அடுத்து எம்.பி.க்கள் எழுத்துப் பூர்வமாக கேட்ட கேள்விகளுக்கு அருண் ஜெட்லி பதிலளித்தார். அப்போது நவம்பர் 9-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 10-ந்தேதி வரை நாடு முழுவதும் 1,100 வருமான வரி சோதனைகள் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் சந்தேகத்துக்கு இடமான அளவில் வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் கூறினார்.
நவம்பர் 8 ஆம் தேதிக்குப் பிறகு தற்போது வரை நாடு முழுவதும் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.5,400 கோடிக்கு கணக்கில் காட்டாத வருவாய் சிக்கி உள்ளது என தெரிவித்தார்..
பண மதிப்பிழப்பு, ஊழல், கருப்பு பணம், கள்ளநோட்டுகள், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி போன்றவற்றை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைதான் இது எனவும் ஜெட்லி தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பான , விசாரணை, சோதனைகள், ஆய்வுகள், வருவாய் மதிப்பீடு செய்வது,அபராதம் மற்றும் குற்ற நடைமுறைகளை தொடருவதற்கும் என அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக கூறினார்.
கருப்பு பணத்தை முற்றிலும் ஒழிக்க பினாமி சொத்து தடைச்சட்டம் திருத்தம் கொண்டுவர உள்ளதாகவும் அருண் ஜெட்லி உறுதிபடத் தெரிவித்தார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை ராஜாங்க மந்திரி சந்தோஷ் கங்குவார் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு, பழைய ரூ.500, 1,000 நோட்டுகள் டெபாசிட்களாக ரூ.12.44 லட்சம் கோடி வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ளதாக தெரிவித்தார்.
