நாடாளுமன்றத்தில் தலித் மக்களின் பிரச்சணைகள் குறித்து பேசுவதற்கு அனுமதியளிக்காததால் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.
மாநிலங்களவையில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நாட்டின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதம் நடைபெறுகிறது.  
இந்நிலையில், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மாயாவதி இன்று தலித் மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு நேரம் கேட்டார்.
ஆனால் மாநிலங்களவை துணைத்தலைவர் குரியன் முதலில் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே பேசுவதற்கு அனுமதியளித்துள்ளார். அப்போது குறுக்கிட்ட மாயாவதி பாஜக ஆட்சியில் தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் சாஹன்பூரில் தலித்துக்கள் தாக்கப்பட்டது, பசுவதை பற்றியும் விரிவாக பேசுவதற்கு நேரம் தரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அப்போது மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்குள் பேசிட வேண்டும் என்று குரியன் கூறியுள்ளார்.  
இதனால் மாயாவதி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கொடுத்துள்ளதாக பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.
நாளை பசுவதை மற்றும் தலித்துக்கள் தாக்கப்பட்டதற்கான விவாதம் மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ள நிலையில் மாயாவதி ராஜினாமா செய்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவரின் இந்த திடீர் முடிவு அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
ஏற்கனவே இன்று காலை மாநிலங்களவையில் பேசுவதற்கு அனுமதி மறுத்ததால் மாயாவதி வெளிநடப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.