bahujan samaj leader murdered in up
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தை மதரீதியாகப் பிரித்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டங்களைத் தான் செயல்படுத்துவார், வளர்ச்சிக்காந திட்டங்கள் இருக்காது என்றுபகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டி உள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி ஏற்ற இரவே, அலகாபாத் நகரில் பகுஜன்சமாஜ் கட்சியின் தலைவர் முகமது ஷாம் கொலைசெய்யப்பட்டார். இதனால், பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இது குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது :
உத்தரப்பிரதேசத்தில் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி ஆள்கிறதா? அல்லது பாரதிய ஜனதா கட்சி ஆள்கிறதா? என்பது முக்கியமல்ல. சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி சட்டம் ஒழுங்கை பராமரிக்காது. ஒரு கோயில் பூசாரியை முதல்வராக அமர வைத்துள்ளார்கள். அவர் மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு பதிலாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டங்களைத்தான் செயல்படுத்துவார்.
மாநிலத்தை மதரீதியாக பாரதிய ஜனதா கட்சியினர் பிளவுபடுத்துவார்கள். மீண்டும் மாநிலத்தில் ஒரு விதமான அசாதாரண சூழலை உண்டாக்குவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விரைவில் நீதிமன்றம் செல்வோம்
உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்து இருக்கிறது என்று பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி குற்றம்சாட்டி வந்தார். நீதிமன்றம் செல்லப்போவதாக அவர் தெரிவித்து இருந்தார். அவரிடம் இது குறித்து நிருபர்கள் கேட்டபோது, “ மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் முறைகேடு செய்து இருக்கிறார்கள். இது தொடர்பாக நாங்கள் அடுத்த சில நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்'' என்றார்.
ஆனால், மாயாவதியின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் ஆணையம், மறுதேர்தல் நடத்த வாய்ப்பு கிடையாது என்று சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
