baby burn in ola taxi at maharastra
‘ஓலா’ நிறுவனத்தின் காரில் ஒரு பெண் குழந்தை பெற்றதால், அந்த பெண்ணுக்கும், குழந்தைக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவசமாக பயணிக்கும் பரிசை அந்த நிறுவனம் அளித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் , கோந்துவா பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் சிங். இவரின் மனைவி ஈஸ்வரி சிங். ஈஸ்வரி சிங் நிறைமாத கர்ப்பினியாக இருந்தார். இவருக்கு இம்மாதம் இறுதியில்தான் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறி இருந்தனர். இந்நிலையில், கடந்த 2-ந்தேதி காலை ஈஸ்வரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
உடனடியாக அந்த பெண்ணின் கணவர் ரமேஷ் சிங், ஓலா நிறுவனத்துக்கு போன் செய்து, வாடகை காரை வர வழைத்தார். அந்த வாடகை காரில் தனது மனைவி, உறவினர்களை அழைத்துக் கொண்டு, ரமேஷ் சிங் அருகில் உள்ள நேரு மருத்துவமனைக்கு சென்றார்.
ஆனால், போகும் வழியில் ஈஸ்வரிக்கு பிரசவ வலி அதிகமானதால் காரின் டிரைவர் வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார். சிறிது நேரத்தில் உறவினர்களின் உதவியால், ஈஸ்வரி ஆண் குழந்தையை பெற்று எடுத்தார். அதன்பின் தாயும், குழந்தையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து ஈஸ்வரியின் கணவர் ரமேஷ் சிங் கூறுகையில், “ நான் காரில் எனது மனைவி, எனது தாய், சகோதரரை அனுப்பிவிட்டு, பைக்கில் மருத்துவமனைக்கு சென்றேன். ஆனால், திடீரென காரில் குழந்தை பிறந்துவிட்டது என்று என் சகோதரர் தொலைபேசியில் தெரிவித்தார். அதன்பின், மருத்துவமனையில் டாக்டர்களிடம் பேசி மனைவியைச் சேர்க்க தேவையான ஏற்பாடுகளைச் செய்தேன். இப்போது மனைவியும், மகனும் நலமாக இருக்கிறார்கள். என் மனைவிக்கு இதுதான் ஓலா காரில் முதல் பயணமாகும்’’ என்றார்.
இந்நிலையில், தங்களின் நிறுவனத்தின் காரில் குழந்தை பெற்ற செய்தியை அறிந்த ‘ ஓலா’ நிறுவனம் ஈஸ்வரி சிங்கும், அவரின் மகனும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தங்களின் நிறுவன காரில் இலவசமாக பயணிக்கும் பரிசை அளிப்பதாக அறிவித்தது. ஈஸ்வரி தனது குழந்தைக்கு பெயர் வைத்த பின், முறைப்படியான சிறப்பு கூப்பன் அளிக்கப்படும் என்றும் ஓலா நிறுவனம் தெரிவித்தது.
இதற்கிடையே மருத்துவமனையில் எந்த காரில் ஈஸ்வரி குழந்தை பெற்றாரோ அதே காரை ஈஸ்வரியும், குழந்தையும் வீடு திரும்புவதற்காக, ஓலா நிறுவனம் நேற்று அனுப்பி வைத்து அவர்களை நெகிழ்ச்சியடைச் செய்தது.
