சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வெளியிடப்படும் என்று நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்தநிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்தநிலையில் தற்போது தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது. தீர்ப்பில் காலியிடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என்றும் அங்கிருந்த கட்டடம் இஸ்லாமிய முறைப்படி கட்டப்படவில்லை என்றும் கூறி உள்ளனர். 12 நூற்றாண்டில் அங்கு கோவில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு மத நம்பிக்கையை மற்ற மதத்தினர் தடுக்க கூடாது என்றும் கூறியிருக்கின்றனர்.

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகி வருவதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீர்ப்பு எந்த வகையில் வந்தாலும் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.