Ayodhya Ram Mandir | ராமர் கோவில் - இந்தி அணியின் தர்மசங்கடம்!
ராமர் கோவில் விழாவுக்கான அழைப்பு, குறிப்பாக ஹிந்துத்துவ, மோடி எதிர்ப்புக் கட்சிகளை கும்பாபிஷேகத்துக்குப் போவதா, வேண்டாமா என்ற பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. ஏன்? இதற்கு விடை அறிய ராமர் கோவில் இயக்கத்தைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக விழா 2024 ஜனவரி 22-ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. ராமர் கோவிலை நிர்மாணித்தது ராமர் கோவில் நிர்மாண அறக்கட்டளை. அது, பிரதமர் மோடியையும், ராமர் கோவில் இயக்கம் நடத்திய ஆர் எஸ்.எஸ்.ஸின் தலைவர் மோகன் பகவத்தையும் விழாவுக்கு முக்கிய விருந்தினராக அழைத்திருந்தது. மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகிய இந்தி கூட்டணி முதல்வர்கள், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள், ராமர் கோவில் நிர்மாணத்தை எதிர்த்து வழக்கு தொடுத்த முஸ்லிம் தலைவர்களையும் கூட அழைத்து விழாவை அரசியலுக்கு அப்பாற்பட்ட விழாவாக நடத்த ஏற்பாடு செய்தது. விழாவுக்கான அழைப்பு, குறிப்பாக ஹிந்துத்துவ, மோடி எதிர்ப்புக் கட்சிகளை கும்பாபிஷேகத்துக்குப் போவதா, வேண்டாமா என்ற பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. ஏன்? இதற்கு விடை அறிய ராமர் கோவில் இயக்கத்தைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.
300 ஆண்டு முயற்சி
போர் முறையிலும், மராத்திய ஆட்சிக் காலத்தில் ராஜதந்திர முறையிலும், வெள்ளையர் காலத்தில் சட்ட ரீதியாகவும், 300 ஆண்டுகளுக்கு மேலாக ராமர் பிறந்த இடத்தைப் பெற ஹிந்து சமுதாயம் பெருமுயற்சி செய்து வந்தது. அது 1980- களில் வெகுஜன இயக்கமாக மாறியது. அதை பா.ஜ.க., சிவசேனா, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே ஆதரித்தன. மற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும், வாக்கு வங்கி அரசியல் காரணமாக அதைத் தீவிரமாக எதிர்த்தன. மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசும், உ.பி. மாநிலத்திலிருந்த சமாஜ்வாதி கட்சி அரசு, மற்ற செக்யுலர் ஆதரவுக் கட்சிகள் அனைத்தும், ‘ராமர் கோவில் இயக்கம் மதச் சார்பின்மையை அழித்துவிடும்’ என்று கூறி, அந்த இயக்கத்தை ஒடுக்க அனைத்து முயற்சிகளும் செய்தன. குறிப்பாக, நரசிம்ம ராவ் அரசு தந்திரங்கள் செய்து இயக்கத்தைப் பலவீனமாக்க முயன்றது. முஸ்லிம்களே தொழுகை செய்யாத பாபர் மசூதியை, மதச்சார்பின்மையின் சின்னமாக ஆக்கினர் செக்யுலர்வாதிகள். ராமர் கோவிலைக் கட்ட விரும்பிய ஹிந்துக்களின் நியாயமான கோரிக்கையை செக்யுலர் கட்சிகளும், ஆட்சியாளர்களும் நிராகரித்ததால்தான் பாபர் மசூதி என்று கூறப்பட்ட கட்டடம் இடிபட்டது. அதிலிருந்து உருவாகியதுதான் பா.ஜ.க.வின் ஹிந்துத்துவ அரசியல். 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தபின், ஹிந்துத்துவத்தை எதிர்ப்பது தான் மதச்சார்பின்மை என்ற பாணி அரசியல் உருவானது. அந்தப் பின்னணியில்தான் வரும் 2024 தேர்தலில் மோடியை வீழ்த்தும் ஒரே நோக்கத்துடன் இந்தி கூட்டணியே அமைக்கப்பட்டது.
செல்வதா, வேண்டாமா - தர்ம சங்கடம்
2024 தேர்தல் நெருங்கும் சமயத்தில்தான், எதிர்க் கட்சிகளுக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பு சென்றது. ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயமும் உற்சாகமாக எதிர்பார்த்த ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பைப் பெற்ற இந்தி கூட்டணிக் கட்சிகள் நிலைகுலைந்து நின்றன. அவர்களால் இணைந்து எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. ஒவ்வொரு இந்தி கூட்டணி கட்சியும் தனித்தனியாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. மைனாரிட்டி வாக்குகள் தவிர, எந்த மத நம்பிக்கையும் இல்லாத இடதுசாரிகள் கும்பாபிஷேக விழாவை வெளிப்படையாக புறக்கணித்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடியது காங்கிரஸ். விழாவுக்குச் சென்றால் அவர்களின் மதச்சார்பின்மைக்குப் பங்கம் வந்து விடுமோ என்ற பயம். கேரளா முஸ்லிம் லீக் தலைமை, இடதுசாரிகளைப் போல் அழைப்பை மறுக்கத் துணிவிருக்கிறதா என்று கேட்டது. அங்கு வயநாடு தொகுதியிலிருந்துதான் ராஹுல் வரும் 2024 தேர்தலில் வெற்றி பெறவேண்டும். வயநாடு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதி. தவிர, வடமாநிலங்களில் பா.ஜ.க. ஹிந்துத்துவக் கட்சி என்று பிரபலமானாலும், காங்கிரஸை ஹிந்து விரோதக் கட்சி என்று மக்கள் கருதவில்லை. இன்றும் பெரும்பாலும் காங்கிரஸுக்கு வாக்களிப்பவர்கள் ஹிந்துக்களே. அவர்களில் பெரும்பாலோர் ராமர் கோவில் எழுவதை ஆதரிப்பவர்கள். கும்பாபிஷேகத்தை காங்கிரஸ் புறக்கணித்ததால், வட மாநிலங்களில், அது ஹிந்து விரோதக் கட்சி என்று பா.ஜ.க. கூறுவதை காங்கிரஸ் ஏற்றது போலானது. மேலும் அது ராமர் கோவில் இயக்கத்தை எதிர்த்தது என்ற அதன் பழைய சரித்திரமும், “விழாவை புறக்கணிப்போம்” என்று காங்கிரஸ் எடுத்த முடிவின் மூலம் அம்பலமானது.
உ.பி.யில் இந்தி கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சிக்கு இன்னும் தர்ம சங்கடம். முலாயம் சிங் யாதவ் தலைமையில் ராமர் கோவில் கட்டுவதை கடுமையாக எதிர்த்த கட்சி அது. 1990-ல் ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஏராளமான கரசேவகர்கள் மடிந்தனர். முலாயமின் மகன் அகிலேஷ் “பா.ஜ.க. ஹிந்துத்துவத்தை எதிர்கொள்ள மிருதுவான ஹிந்துத்துவம் தேவை” என்று கூறி, ஹிந்துக்களின் வாக்குகளைப் பெற முயற்சிக்கும் நேரத்தில், அவருக்கும் பெரும் தர்ம சங்கடம். விழாவில் பங்கேற்றால் அவர் ஏங்கும் முஸ்லிம்கள் வாக்குகள் கிடைக்குமா என்ற கேள்வி ஒரு புறம். பங்கேற்கவில்லை என்றால், ஹிந்து எதிர்ப்புக் கட்சி என்று அதற்குப் பட்டம் வாங்குவது மறு புறம். அது ராமர் கோவிலை எதிர்த்து, கரசேவகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது அனைத்தையும் நினைவுபடுத்த பா.ஜ.க.வுக்கு ஒரு வாய்ப்பாக அமையும். அதனால், விழாவில் பங்கேற்காமல், பின்பு ஒரு நாள் வருகிறேன் என்று சொல்லி நழுவி விட்டார் அகிலேஷ். ராமர் கோவில் யாத்திரை செய்த பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானியைக் கைது செய்து, யாத்திரையை நிறுத்தினார் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரான லாலு பிரசாத் யாதவ். கும்பாபிஷேக அழைப்பினால் அவரது கட்சிக்கும், சமாஜ்வாதி கட்சிக்கு இருக்கும் அதே சங்கடம்தான். தமிழக முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்த நிலையில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் சில நாட்கள் கழித்து அயோத்தி செல்வார் என்று செய்தி. அது நடந்தால், அதன் அரசியல் தாக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றியும் சர்ச்சை நடக்கிறது.
ஆக மொத்தத்தில் தனக்குக் கோவில் கட்டுவதை எதிர்த்தவர்கள் அனைவரையும் ராமபிரான் பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறார். இந்த கட்சிகள் எடுத்த முடிவுகளும், அதன் விளைவுகளும் என்னவாக இருக்கும் என்பது வரும் வாரங்களில் தெரிய வரும்.
Note to the Reader: This article originally appeared in Thuglak Tamil Weekly Magazine www.gurumurthy.net. It has been reproduced in Asianet News Network.