அயோத்தி நில பிரச்சனையை சமரசமாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் 3 மத்தியஸ்தர்களையும் நியமித்துள்ளதுடன், 8 வாரங்களில் சமரச பேச்சுவார்த்தையை முடிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்தியஸ்தர்கள் குழுவில் நியமிக்கப்பட்டிருக்கும் மூவருமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

உத்தரபிரதேசத்தின், அயோத்தியில் உள்ள, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை எதிர்த்து 3 தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மொத்தம் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. பின்னர் இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. 

கடந்த மாதம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இவ்வழக்கின் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பில் சமரசமாக தீர்த்துக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கொண்ட சமரச குழுவை நியமித்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சமரசப் பேச்சுவார்த்தை மிக ரகசியமாக நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஃபக்கிர் மொகம்மது இப்ராஹிம் கலிஃபுல்லா

உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஃபக்கிர் மொகம்மது இப்ராஹிம் கலிஃபுல்லா 1951ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ம் தேதி தமிழகத்தின் சிவங்கை மாவட்டம் காரைக்குடியில் பிறந்தவர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றிய கலிஃபுல்லா, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து 2016ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர்

ஆன்மிகக் குருவாகக் கருதப்படும் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தமிழகத்தின் பாபநாசம் பகுதியில் 1956ம் ஆண்டு மே 13ம் தேதி பிறந்தவர்.

ஸ்ரீராம் பஞ்சு

மூத்த வழக்குரைஞரும், நடுநிலையாளராகவும் திகழ்பவர் ஸ்ரீராம் பஞ்சு. தி மெடியேஷன் சாம்பர்ஸ் நிறுவனரும் ஆவார். வணிகம், நிறுவனங்கள் என பல்வேறு வகையான வழக்குகளில் இவர் மத்தியஸ்தராக செயல்பட்டு சுமூகத் தீர்வுக்கு வழிகண்டுள்ளார். இவர் சென்னையைச் சேர்ந்தவர்.