கொரோனா வைரசுக்கு எதிரான போர் சூழ்நிலையால், நாடு காஷ்மீர் போரை மறந்துவிட்டது. ஆனால். பாகிஸ்தான் மறக்கவில்லை என்று சிவசேனா காட்டமாக கூறியுள்ளது. 

கடந்த ஞாயிறன்று காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் ஹந்த்வாரா பகுதியில், பொதுமக்களை பிணையக் கைதிகளாக பிடித்துச் சென்ற பயங்கரவாதிகளை எதிர்த்து இந்திய ராணுவ வீரர்கள் சண்டையிட்டனர். இத்தாக்குதலில் கர்னல் அசுதோஷ் ஷர்மா, மேஜர் அனூஜ் உட்பட 5 பாதுகாப்பு படையினர் வீர மரணமடைந்தனர். பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டனர். இது இந்திய ராணுவத்துக்கு சமீப காலங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும்.

இது குறித்து சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னா வெளியிட்டுள்ள கட்டுரையில், 'வலுவான மற்றும் தேச பக்தி கொண்ட அரசு மத்தியில் இருக்கும் போது, இந்தியாவின் சொந்த நிலத்தில் ஒரே நேரத்தில் துணிச்சல் மிக்கவர்கள் கொல்லப்பட்டிருப்பது நல்ல அறிகுறி இல்லை. கொரோனா வைரசுக்கு எதிரான போர் சூழ்நிலையால், நாடு காஷ்மீர் போரை மறந்துவிட்டது. ஆனால். பாகிஸ்தான் மறக்கவில்லை. ஐந்து பேரின் இழப்புக்கு பழி தீர்க்க சர்ஜிக்கல் தாக்குதலை மீண்டும் நடத்த வேண்டும். அதைப் தம்பட்டமில்லாமல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

2016-ம் ஆண்டு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள்  நடத்திய தாக்குதலில் 17 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 28-ம் தேதி நள்ளிரவு தொடங்கி 29-ம் தேதி அதிகாலை வரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நுழைந்த இந்திய ராணுவ சிறப்புப் படை வீரர்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதல் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.