பாஜக ஆட்சியில் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் அதிகரிப்பு: ராகுல் காந்தி!
பாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

மனித நாகரீகத்தின் உச்சத்தை அடைந்து விட்டதாக பீற்றிக் கொண்டிருக்கும் வேளையில், சாதிய வன்கொடுமைகளும், பெண்கள் மீதான தாக்குதல்களும், மத மோதல்களும், சாதியின் பெயரால் ஒருவரை ஒருவர் இழிவு படுத்தும் செயல்களும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் சித்தி மாவட்டத்தில் பழங்குடியின வகுப்பை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் மீது, பிரவேஷ் சுக்லா என்ற இளைஞர் மது போதையில் சிகரெட் புகைத்துக் கொண்டே சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரவை மாற்றம்: யார் பதவிக்கு வேட்டு? வருண் காந்திக்கு சீட் மறுப்பு?
குற்றம் சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லா, சித்தி தொகுதி பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லாவுக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. ஆனால், அதனை அவர் மறுத்துள்ளார். தனக்கு அவரைத் தெரியுமே தவிர, அவர் பாஜக தொண்டரோ அல்லது எனது பிரதிநிதியோ கிடையாது என கேதார்நாத் சுக்லா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்த நிலையில், பாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. மத்திய பிரதேசத்தில் பாஜக தலைவர் ஒருவரின் மனிதாபிமானமற்ற குற்றத்தால் ஒட்டுமொத்த மனித குலமே அவமானமடைந்துள்ளது. பழங்குடியினர் மற்றும் தலித்துகள் மீதான பாஜகவின் வெறுப்பின் கேவலமான முகமும் உண்மையான குணமும் இதுதான்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
;
முன்னதாக, தலைமறைவாக இருந்த பிரவேஷ் சுக்லாவை கைது செய்துள்ள அம்மாநில போலீசார், அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிரிமினல்களுக்கு சாதி, மதம், கட்சி கிடையாது. அந்த நபர் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுகான் தெரிவித்துள்ளார்.