ஏ.டி.எம். களில், 2000 ரூபாய் நோட்டுகளும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் சேவையை மேம்படுத்த, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ். முந்த்ரா தலைமையில் புதிய குழுவை மத்திய அரசு அமைக்கிறது. 

இந்த குழு நாடுமுழுவதும் உள்ள ஏ.டி.எம். களின் சேவையை மேம்படுத்தி, குறுகிய காலத்தில் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் மக்களுக்கு அதிகபட்சமாக ரூ.2000 நோட்டு கிடைக்கும் வகையில் செயல்பட உள்ளது.

இது குறித்து பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி கந்த தாஸ் புதுடெல்லியில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், நாடு முழுவதும் இருக்கும் ஏ.டி.எம். மையங்களை மறுஅளவீடு, சீரமைப்பு செய்து, மக்களுக்கு 2000 ரூபாய் நோட்டு கிடைக்கும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த பணிகள் துரிதமாக, திட்டமிட்ட படி செயல்பட, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ். முந்த்ரா தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த குழு வங்கிகளுடனும், ஏ.டி.எம். களில் பணம் நிரப்பும் பணியைச் செய்துவரும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, விரைவாக அனைத்து சீரமைப்பு பணிகளையும் முடிக்க துணை புரியும். 

மிகக் குறுகிய காலத்தில் ஏ.டி.எம். மையங்களில் 2000 ரூபாய் நோட்டுக்கள் மக்களுக்கு கிடைப்பதை இந்த குழு உறுதி செய்யும் என்று தெரிவித்தார்.