500 மற்றும் 1000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. மேலும் ஏடிஎம் மையங்களில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள், ஏடிஎம்மில் நீண்ட வரிசையில் காத்திருந்து ரூ.2000 எடுத்தனர். சில வாரங்களில் ஏடிஎம் மையங்களில் பணம் வரம்பு ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டது.

இதற்கிடையில், புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்துக்கு விடப்பட்டன. ஆனால், அந்த பணமும் சில ஏடிஎம்களில் மட்டுமே கிடைத்தது

நாடு முழுவதும் அனைத்து ஏடிஎம்களிலும் நேற்று முதல் ரூ.4,500 கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதைதொடர்ந்து பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம்களுக்கு படை எடுத்தனர். ஆனால், அதில் ஏமாற்றமே மிஞ்சியது.

ஒரு சில ஏடிஎம் மையங்களில் மட்டுமே பணம் இருந்தது. அதிலும், 500 ரூபாய் தட்டுப்பாட்டால் ரூ.4 ஆயிரம் மட்டுமே எடுக்க முடிந்ததாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. மேலும் பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் செயல்படத் தொடங்கியதால் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. சில ஏடிஎம் மையங்களில் மட்டுமே 500 ரூபாய் தட்டுப்பாடு உள்ளது. ஓரிரு நாள்களில் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் இயல்புநிலை திரும்பிவிடும் என்றனர்.