மீண்டும் தலைவரானார் ரத்தன் டாடா

புதுடெல்லி, அக் 25-

டாடா சன்ஸ் குழுத்தின் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்ட்ரி அதிரடியாக நீக்கப்பட்டு, அடுத்த 4 மாதங்களுக்கு இடைக்காலத் தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்றார்.

டாடா சன்ஸ் குழுமத்தின் வாரியக்குழு நேற்று கூடி ஆலோசித்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து தலைவராக இருந்த சைரஸ் மிஸ்ட்ரியை அதிரடியாக நீக்க பரிந்துரை செய்யப்பட்டது.

புதிய தலைவரை தேர்வு செய்யும் குழுவில், ரத்தன் டாடா, வேனு ஸ்ரீனிவாசன், அமித் சந்திரா, ரோனென் சென் மற்றும் லார்டு குமார் பட்டாச்சார்யா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். இந்த தேர்வுகுழு நான்கு மாதத்தில் தனது பணியை முடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீக்கப்பட்ட சைரஸ் பி.மிஸ்டரி டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஆறாவது தலைவராக இருந்து வந்தார். டாடா பெயரில் அல்லாத இரண்டாது தலைவர் இவர்.

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனம் டாடா. இந்த குழுமத்திற்கு உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பலவிதமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக கடந்த 1991-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை ரத்தன் டாடா பொறுப்பு வகித்தார். அதன்பின்னர் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலகிக் கொள்ள, சைரஸ் மிஸ்திரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக இவர் தலைமை பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் அந்த குழுமத்தில் ஏற்பட்ட சில சிக்கல்களால் சைரஸ் மிஸ்திரிக்கு சிக்கல் உருவானதாக கூறப்படுகிறது. சைரஸ் மிஸ்ட்ரி நீக்கத்துக்கான காரணத்தை ஏதும் அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை. அதேசமயம், லாபம் ஈட்டாத வர்த்தகத்துறையில் சைரஸ் அனுகிய விதம் குழுமத்துக்கு மனவருத்தத்தை தந்தது இதனால், அவர் நீக்கப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.

சைரஸ் மிஸ்ட்ரி , டாடா குழுமத்தின் 18 சதவீத பங்குகளை கைவசம் வைத்திருக்கும் பலான்ஜி மிஸ்ட்ரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. டாடா குழுமத்தில் தனிநபர் ஒருவர் இந்த அளவு பங்குகளை வைத்திருப்பவர் இவர் ஒருவர் மட்டுமே.