உயர்கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதித்து அசாம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது
உயர்கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் பணியில் இருக்கும் போது, அவர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்து அசாம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சாதாரண உடைகளில் அவர்கள் வரக்கூடாது. ஜீன்ஸ், டி-ஷர்ட், லெக்கின்ஸ் ஆகிய உடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
“சில உயர்கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான உடையை அணியும் பழக்கத்தில் உள்ளவர்களாக காணப்படுகின்றனர். இது பெருமளவில் பொதுமக்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது.” என அசாம் மாநில உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின்படி, ஆண் ஆசிரியர்கள் தகுந்த முறையான சட்டை மற்றும் பேன்ட், வேட்டி-பைஜாமா அணிந்து பணிக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல, பெண் ஆசிரியர்கள் சல்வார் உடை, சேலை, மெகேலா-சாதர் மற்றும் பிற பாரம்பரிய உடைகளில் பணிக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் தூய்மையான, கண்ணியமான பளிச்சென்று இல்லாத மங்கலான நிறத்திலான ஆடைகளை அணிந்திருக்க வேண்டும், அது பளபளப்பாகத் தோன்றக்கூடாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஷுவல், பார்ட்டி ஆடைகளை தவிர்க்குமாறும் ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஒரு ஆசிரியர் அனைத்து வகையான கண்ணியத்திற்கும், குறிப்பாக கடமைகளை நிறைவேற்றும் போது எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதால், பணியிடத்தில் கண்ணியம், தொழில்முறை ஒழுங்குபாடு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் ஆடைக் குறியீட்டைப் பின்பற்றுவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநில அரசின் ஆசிரியர்கள் மீதான இந்த ஆடை கட்டுப்பாடு கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஜீன்ஸ் மற்றும் லெக்கின்ஸ் உடைகள் அசாம் அல்லது இந்திய கலாசாரம் இல்லை என ஆடை கட்டுப்பாட்டை ஆதரிப்பவரக்ள் கருத்து தெரிவிக்கின்றனர். அதேசமயம், இது தனிப்பட்ட சுதந்திரத்தை பறிக்கும் செயல் என சிலர் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
“ஆசிரியர் என்பவர் மிகவும் மரியாதைக்குரிய நபர். அவர்கள் பணியிடத்தில் மட்டுமல்ல, வெளியிலும் கண்ணியமாகத் தோன்ற வேண்டும்.” என ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை பாராட்டிய ஜெர்மன் அமைச்சர்!
ஆனால், இந்த உத்தரவு தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் செயல் என மற்றொரு ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “ஆசிரியர்கள் அநாகரீகமான உடைகளை அணிந்து கற்பிக்கச் செல்வதில்லை. அவர்கள் என்ன அணிய வேண்டும், எதை அணியக்கூடாது என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த ஆடை கட்டுப்பாட்டை நான் ஆதரிக்கவில்லை.” என அவர் தெரிவித்துள்ளார்.
ஆடை கட்டுப்பாடுகளுக்கு பதிலாக, ஆசிரியர் சமூகம் மற்றும் கல்வி முறையைப் பாதிக்கும் பிற பிரச்சினைகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என இன்னொரு ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். பல கல்லூரிகளின் கட்டிடங்கள் பழுதடைந்துவிட்டன. ஆனால், அதனை சீரமைக்க அரசிடமிருந்து எந்த ஆதரவும் இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். “ஜீன்ஸ், டி-ஷர்ட்களை அநாகரீகமான அல்லது கண்ணியமான ஆடைகள் அல்ல என்று தீர்மானிப்பதற்கான அளவுகோல் என்ன? இதை யார் தீர்மானிப்பது?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, அசாம் மாநிலத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கும் இதேபோன்ற ஆடைக் கட்டுப்பாடுகள் கடந்த மே மாதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
