இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை ஜெர்மன் அமைச்சர் வோல்கர் விஸ்ஸிங் பாராட்டியுள்ளார்

இந்தியாவில் உள்ள ஜெர்மன் தூதரகம் நாட்டின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை வெகுவாகப் பாராட்டியுள்ளது. ஜெர்மனியின் டிஜிட்டல் மற்றும் போக்குவரத்து அமைச்சர் வோல்கர் விஸ்ஸிங் இந்தியாவில் பணம் செலுத்த UPI முறையை பயன்படுத்தினார். இதனை சுட்டிக்காட்டி, நாட்டின் மிகப்பெரிய வெற்றிக் கதைகளில் இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பும் ஒன்று என ஜெர்மன் தூதரகம் புகழாரம் சூடியுள்ளது.

நாட்டில் அனைவரும் UPI மூலம் சில நொடிகளில் பரிவர்த்தனை செய்யலாம். எளிதாக இருக்கும் இந்த கட்டணம் செலுத்தும் முறையை லட்சக்ககணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். UPI கட்டண அனுபவத்தால் வோல்கர் விஸ்ஸிங் மிகவும் ஈர்க்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் மாடலைப் பற்றியும் உயர்வாகப் பேசியதாக இந்தியாவுக்கான ஜெர்மன் தூதரகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பெங்களூரில் நடந்த ஜி20 டிஜிட்டல் அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெர்மன் அமைச்சர் வோல்கர் விஸ்ஸிங், UPI பயன்படுத்தி சாலையோரக் கடைகளில் தனக்கான பொருட்களை வாங்கினார். இந்த வீடியோவையும் ஜெர்மன் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Scroll to load tweet…

யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது இந்தியாவின் மொபைல் அடிப்படையிலான கட்டணம் செலுத்தும் முறையாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் மூலம் 24 மணி நேரமும் பணம் செலுத்த முடியும். நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் இந்த கட்டண முறை செயல்பாட்டில் உள்ளது. இதுவரை, இலங்கை, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை UPI கட்டணம் செலுத்தும் முறையில் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளன.

UPI கட்டண செயல்பாட்டு முறையை பயன்படுத்த இந்தியாவும் பிரான்சும் ஒப்புக் கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி ஜூலை மாதம் அறிவித்தார். தனது சமீபத்திய பிரான்ஸ் பயணத்தின் போது பாரிஸில் இந்திய சமூகத்தினரிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் UPI அல்லது பிற டிஜிட்டல் தளங்கள் நாட்டில் ஒரு பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் இந்தியாவும் பிரான்சும் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியர்கள் UPI முறையை பயன்படுத்தி பிரான்ஸில் கட்டணம் செலுத்த முடியும்.

டிஜிட்டல் இந்தியா


இந்தியாவை மின்னணுத் துறையில் மேம்பட்ட சமூகமாகவும், அறிவுசார் பொருளாதாரமாகவும் மாற்றும் முயற்சியில் உருவாக்கப்பட்ட முதன்மையான திட்டம்தான் டிஜிட்டல் இந்தியா திட்டம். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டம், தனது சேவைகள், பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்துதல், பொது மக்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்ற செயல்களால் புதிய இந்தியாவின் மிகப்பெரும் வெற்றித் திட்டங்களுள் ஒன்றாக இன்றுவரை விளங்குகிறது.

தற்போது நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவின் தொழில்நுட்பங்களையும், தொழில் கட்டமைப்பையும் மாற்ற டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விரிவாக்கம் செய்ய ரூ.14,903 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை இரு தினங்களுக்கு முன்னர் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், செயற்கை நுண்ணறிவு, உமாங் சேவைகள், தேசிய அறிவு வலையமைப்பை நவீனப்படுத்துதல், சைபர் பாதுகாப்பு துறையில் புதிய முன் முயற்சிகள் உள்ளிட்டவைகள் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aadhaar : ஆதார் அட்டையை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி.? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!

மேலும், இந்த அறிவிப்பு இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும், சேவைகளுக்கான டிஜிட்டல் அணுகலை ஊக்குவிக்கும், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் 5ஜி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பெரிய நாடுகளுடன் இந்தியா போட்டியிடுகிறது. மொத்த நிகழ்நேர ஆன்லைன் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியாவில் 2014 ஆம் ஆண்டில் 85 சதவீதம் பேர் செல்போன் பயன்படுத்தினர். ஆனால், இன்று 99.7 சதவீதம் பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். 2014 ஆம் ஆண்டில் மின்னனு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய சூழலில் தான் நாடு இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சம் கோடி மதிப்பிலான மின்னணு பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த 9 ஆண்டில் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பங்கு இல்லாத இடமே இல்லை என்ற நிலையை அடைந்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.