Assam Chief Minister took the last building block in the cycle of violence in the brothers body
அசாம் மாநிலத்தில், மருத்துவமனையில் இறந்துவிட்ட தனது சகோதரர் உடலை ஊருக்கு கொண்டு செல்ல சாலைவசதி இல்லாததையடுத்து, சைக்கிளில் கட்டி ஒருவர் கொண்டு சென்ற காட்சி பெரும் வைரலாகவும், விமர்சனத்தையும் உண்டாக்கி இருக்கிறது.
அதிலும், இந்த சம்பவம் மாநில முதல்வர் சர்பானந்த சோனாவாலின் தொகுதியில் நடந்தது வேதனையை உண்டாக்கியுள்ளது.
அசாம் மாநிலம், லட்சுமிபூர் மாவட்டத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பலிஜான் கிராமத்தைச் சேர்ந்தவர் டிம்பிள் தாஸ்(வயது18). இவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, இவரின் குடும்பத்தினர் டிம்பிள் தாஸை கட்டிலில் தூக்கிச் சென்று காரம்பூர் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு மருத்துவமனை பூட்டிக்கிடந்தது. இதையடுத்து, அங்கிருந்து மஜூலி எனும் இடத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு டிம்பிள் தாஸை தூக்கி வந்தனர். ஆனால், டாக்டர் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, தனது சகோதரர் உடலை கொண்டு செல்வதற்கு மஜூலி நகரில் இருந்து தனது பலிஜான் கிராமத்துக்கு சாலை வசதி இல்லை என்பதை அறிந்த குடும்பத்தினர், டிம்பிள் தாஸின் உடலை சைக்கிளில் வைத்து கட்டி கொண்டு சென்றனர்.
இந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் சிலர் பரப்பிவிட்டனர். இதைப் பார்த்த முதல்வர் சர்பானந்த சோனாவாலும் அதிர்ச்சி அடைந்து, விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இது குறித்து மஜூலி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மணிக் மிலி கூறுகையில் “ லட்சுமிபூர் மாவட்டதில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முதலில் காரம்பூர் ஒரு நோயாளிகளை காரம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், மருத்துவமனை பூட்டி இருந்தால், மஜூலி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அந்த நோயாளி வரும்போதே மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
அவர் இறந்தபின், மருத்துவமனை சார்பில் இருந்த அமரர்ஊர்தி வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்தோம். ஆனால், வாகனத்தின் டிரைவர் வருவதற்குள் நோயாளியின் குடும்பத்தினர், இறந்தவரை சைக்கிளில் வைத்து தள்ளிச்சென்றனர்” எனத் தெரிவித்தார்.
மஜூலி துணை ஆணையர் ஜே.பி.ஜா கூறுகையில், “ மலிஜான் கிராமத்துக்கு செல்ல சாலைவசதி இல்லாததால், அந்த குடும்பத்தினர் இறந்தவர் உடலை சைக்கிளில் வைத்து கொண்டு சென்றனர். சிகிச்சைக்காக கொண்டு வரும்போதும், மூங்கில் பாடையில் வைத்து கொண்டு வந்தனர் “ எனத் தெரிவித்தார்.
இந்த சம்பவம் பல்வேறு செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டு கண்டனம்தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் சர்பானந்த சோனாவால் இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, மருத்துவமனை டீன், சுகாதாரத்துறை இயக்குநர் ஆகியோர் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டார்.
இதேபோல கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்ட தனது மனைவியின் உடலைக் கொண்டு செல்ல கையில் பணம் இல்லாததால், தோளில் சுமந்து சென்ற காட்சி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
