உலகையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் தற்போது அசுர வேகம் எடுத்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி 9,152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் 308 பேர் பலியாகி இருக்கின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் வீரியத்தை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. 21 நாட்கள் ஊரடங்கு நாளையுடன் நிறைவடையும் நிலையில் அது இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்துகள் என அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் இருக்கின்றனர். அத்தியாவசிய கடைகளான காய்கறி, மளிகை, மருந்தகங்கள் போன்றவை மட்டுமே நேர கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் இருக்கும் மதுக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் பெரும் திண்டாட்டத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். பல்வேறு மாநிலங்களில் சட்டத்திற்குப் புறம்பாக மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்வதும், கள்ளச்சாராயம் காய்ச்சி காவல்துறையில் பிடிப்பதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மேகாலயாவில் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மதுக் கடைகள் செயல்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்திருக்கும் நிலையில் மதுக்கடைகள் இல்லாத பகுதிகளில் வீட்டுக்கே வந்து மது விநியோகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே மதுக்கடைக்கு சென்று மது வாங்க அனுமதிக்கப்படுவர் என்று உத்தரவிட்டிருக்கும் அரசு மது வாங்க ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்ல அனுமதி கிடையாது என்றும் கூறியிருக்கிறது.

அதே போல அசாமிலும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. மதுக்கடைகளில் குறைந்த அளவிலான பணியாளர்களை கொண்டு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் விற்பனையை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அசாமில் இது வரை 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேகாலயாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.