கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ளது இடுக்கி அணை. குறவன் மலை, குறத்தி மலை ஆகிய இரு மலைகளையும் இணைத்து ஒரு அரைவட்டம் போன்று, பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது இந்த அணை.

வளைவு வடிவத்தில் கட்டப்பட்டுள்ள  இந்த இடுக்கி அணை ஆசியாவிலேயே மிகப் பெரியதாகும். கடந்த 1969-ம் ஆண்டு அணைக் கட்டும் பணி தொடங்கப்பட்டு 1973-ம் ஆண்டு இடுக்கி அணை பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த அணையின் மொத்த உயரம் 550 அடி உயரமாகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் இருந்து  இடுக்கி மாவட்டம்  மூலமட்டம் பகுதியில் உள்ள நீர்மின்நிலையத்தில் மின்சாரம் எடுக்கப்படுகிறது.. இந்த நீர்மின் நிலையத்தில் இருந்து 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

செருதோனி, குலமாவு ஆகிய இரு அணைகளையும் இணைத்து, இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த கொள்ளவு 72 டிஎம்சி ஆகும்.

இந்த அணையின் நீர்மட்டம் தற்போது  2398.98 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் மதகுகள் நேற்று  மதியம் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக அணையில் இருந்து வினாடிக்கு 50  ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. படிப்படியாக இது உயர்த்தப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதை அடுத்து அணை பகுதியில் வசிக்கும் கரையோர மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தண்ணீர் வரும் பாதையில் செல்பி எடுக்கவோ, மீன் பிடிக்கவோ யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இடுக்கி அணை திறக்கப்பட்டதை ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். பொதுவாக மலையாள மக்கள் மழையை எப்போதுமே கொண்டாடி மகிழ்வார்கள்.

அந்த வகையில் இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பின் அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளதால் அம்மாவட்ட மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் அணையின் அழகை கண்டு ரசித்து வருகின்றனர். ஆம் அணையின் அந்த அழகைக் காண கண் கோடி வேண்டும்.