வேலை செய்யாத மைக்கை எரிச்சலுடன் தூக்கி எறிந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்!
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது வேலை செய்யாத மைக்கை எரிச்சலுடன் வீசி எறிந்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட், பார்மரில் நடந்த பொது நிகழ்ச்சியின்போது, மைக் செயலிழந்ததால் கோபமடைந்த அவர் மைக்கை தரையில் வீசி ஏறிந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
முதல்வர் அசோக் கெலாட் நாற்காலியில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தபோது, ஹேண்ட் மைக் திடீரென வேலை செய்யாமல் போனது. இதனால் எரிச்சல் அடைந்த அவர் பார்மர் மாவட்ட ஆட்சியர் நின்றிருந்த தனது இடப்பக்கம் மைக்கை கோபமாக எறிந்தார். கீழே விழுந்த மைக்கை கலெக்டர் எடுத்தார். அதற்குப் பதிலாக முதல்வருக்கு மற்றொரு மைக் வழங்கப்பட்டது.
முதல்வர் கெலாட் மாவட்ட ஆட்சியர் மீது மைக்கை வீசி எறிந்ததாகக் கூறி இந்த வீடியோ பரவியதால், அதற்கு முதல்வர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாவட்ட ஆட்சியர் மீது மைக் வீசப்படவில்லை" என்று தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை இரவு பார்மர் சர்க்யூட் ஹவுஸில், பெண்களுக்கான பல்வேறு அரசுத் திட்டங்கள் குறித்த கருத்துகளைச் சேகரிக்க முதல்வர் கெலாட் பெண்கள் குழுவுடன் உரையாடினார். அப்போது இந்தச் சம்பவம் நடந்தது. கூட்டத்தினர் முன்னிலையில் முதல்வர் பேச முயன்றபோது, மைக் பழுதடைந்தது. இதனால் கோபமடைந்த அவர், மைக்கை வெறுப்புடன் தரையில் வீசினார்.
பெண்கள் குழுவுக்குப் பின்னால் சிலர் நிற்பதைக் கண்ட முதல்வர் மீண்டும் அமைதி இழந்தார். அவர்களைப் போகச் சொன்னார். "எஸ்பி (காவல்துறை கண்காணிப்பாளர்) எங்கே? எஸ்பி மற்றும் கலெக்டர் இருவரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள்" என கசப்புடன் கூறினார்.
அசோக் கெலாட் பார்மரில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்நிகழ்ச்சியில், முதல்வரிடம் பெண்கள் பல்வேறு திட்டங்களின் பயன்கள் குறித்து பேசினர். அங்கன்வாடி பணியாளர்களின் மதிப்பூதியத்தை உயர்த்தியதற்காக முதல்வர் அசோக் கெலாட்டுக்கு நன்றி தெரிவித்தனர்.