Asaram Bapu: பாலியல் வன்கொடுமை வழக்கு.. சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பாலியல் வன்கொடுமை வழக்கில் குஜராத் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் பிரபல சாமியார் ஆசாராம் பாபு. இவர் தன்னைத்தானே கடவுள் என்று சொல்லிக் கொள்பவர். இவருக்கு பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன.
சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 2013 ஆம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2018 ஆம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இதையும் படிங்க..இனி இதுதான் ஆந்திராவின் தலைநகரம்.. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது குவியும் புகார்கள் - பின்னணி என்ன?
இந்த நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் 2001 முதல் 2006 வரை தான் இருந்த நேரத்தில் சாமியார் ஆசாராம் பாபு தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சூரத்தைச் சேர்ந்த பெண், அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா போலீசில் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
2013ல் பதிவு செய்யப்பட்ட இந்த புகார் தொடர்பான வழக்கை குஜராத்தின் காந்தி நகரில் உள்ள கோர்ட் விசாரித்து வந்தது. பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு, அவரது மனைவி லட்சுமி, மகன் நாராயண் சாய், சாமியாரின் பக்தைகளாக கூறிக்கொண்ட 4 பெண்களும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என கோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. சாமியாரின் மனைவி, மகன், 4 பெண் பக்தைகளுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறிய அந்த 6 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்தது.
ஆசாராம் பாபுவுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. இன்று ஆசாராம் பாபுவுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை அடுத்து, அவர் தொடர்ந்து ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க..டேய் எப்புட்றா.. நாம் தமிழர் கட்சியில் இணைய திருமகன் ஈவெரா என்னை சந்தித்தார் - சீமான் பரபரப்பு பேச்சு