பாகிஸ்தானில் செயற்படும் தீவிரவாதிகளை அழிக்க இந்தியாவிற்கு உரிமை உள்ளது என அகில இந்திய மஸ்லீஸ் இ இத்ஹதுல் முஸ்லீமின் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

கடந்த 14-ம் தேதி புல்வாமாவில் நடைபெற்ற தற்கொலைப் படைத்தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள், பல நாட்டு தலைவர்களும் கூறிவந்தனர்.

இதனிடையே ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்குவதாக பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த துல்லிய தாக்குதலில் சிறப்பாக செயல்பட்ட இந்திய விமானப்படை விமானிகளுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. 

இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்லாமிய கட்சியான அகில இந்திய மஸ்லீஸ் இ இத்ஹதுல் முஸ்லீமின் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசியும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். நாங்கள் அரசுக்கு ஆதரவாக நிற்கிறோம். அரசு சாரா அமைப்புகளின் நடவடிக்கைகளை ஒரு அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றால், மற்றொரு நாடு தன்னுடைய பாதுகாப்புக்காக தீவிரவாத வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்கான இலக்கை நோக்கி செயற்பட உரிமை உள்ளது. 

மேலும் அரசு விரைவில் பாகிஸ்தானிய தீவிரவாதத் தலைவர்கள் ஹஃபிஸ் சாயீத் மற்றும் மசூத் அஸார் ஆகியோரை பிடிக்கும் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.