இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விஷயத்தில் பாகிஸ்தான் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்று  ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, ''இந்த கடினமான நேரத்தில் தைரியமான விமானப் படை விமானி அபிநந்தன் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு என்னுடைய பிரார்த்தனைகள். ஜெனீவா ஒப்பந்தத்தின் ஆர்ட்டிகிள் 3-ன் படி, ஒவ்வோர் அரசும் கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்தவேண்டும்.

இந்திய விமானப் படையின் விமானி அபிநந்தன் விவகாரத்தில் ஜெனீவா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் கடைப்பிடிக்கவேண்டும்'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியாவை சேர்ந்த மிக்-21 ரக விமானத்தை செலுத்திக் கொண்டிருந்தபோது அந்நாட்டு ராணுவ வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தில் இருந்து குதித்த இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கினார். கைதான விமானி அபிநந்தன் பெயர் மற்றும் விமானப்படையில் தனது அடையாள எண் ஆகியவற்றை வீடியோவுடன் பாகிஸ்தான் வெளியிட்டது.  

சென்னையை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் தற்போது பாகிஸ்தான் ராணுவத்தினரின் பிடியில் சிக்கியுள்ளார். அவரை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.