விவசாய வருமானத்துக்கு வரி விதிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி விவசாய வருமானத்தின் மீது வரி விதிப்பதற்கு மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிதி அயோக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராய் , கிராமங்களில் வசிக்கும் வசதி படைத்தோர் தங்களுக்கு விவசாயம் மூலம் வருமானம் கிடைத்தது என்று கூறி வரியே செலுத்துவதே இல்லை என தெரிவித்தார்.

அவர்களது வருமானத்துக்கு வரி விதிக்கப்படுவதும் கிடையாது. இதனால் வரி ஏய்ப்பு நடக்கிறது. எனவே விவசாயம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் தனி நபர்களுக்கு வரி விதிக்க நிதி ஆயோக்கில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நிதி ஆயோக் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் பிபேக் தேப்ராயின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது அவருடைய சொந்த கருத்து  என்று கூறப்பட்டு ள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி , விவசாய வருமானத்துக்கு வரி விதிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி விவசாய வருமானத்தின் மீது வரி விதிப்பதற்கு மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றும் தெரிவித்தார்.