arun jaitley replies to supreme court
எம்.பி.கள் ஓய்வூதியம் தேவையா என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் 80 சதவீத முன்னாள் எம்.பி.க்கள் கோடீஸ்வரர்கள் என்று தகவல் தரப்பட்டது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று மாநிலங்கள் அவையில் எழுப்பினர்.
அப்போது பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, “ மக்களின் பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதுகுறித்து முடிவு செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே இருக்கிறது. எம்.பி.கள் எவ்வளவு ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதையும் நாடாளுமன்றம் மட்டுமே முடிவுசெய்யும்'' என்றார்.

உச்ச நீதிமன்றம்
எம்.பி.களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக லோக் பரஹரி எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
இந்த வழக்கில், முன்னாள் எம்.பி.களில் 80 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்று தகவலை குறிப்பிட்டு இருந்தது. இது குறித்து பதில் அளிக்க அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.
ஏழ்மையில்
இந்த விவகாரத்தை மாநிலங்கள் அவையில் சமாஜ்வாதி கட்சி எம்.பி. நரேஷ் அகர்வால் எழுப்பினார். அப்போது அவர் பேசுகையில், “ எம்.பி.கள் தோற்றம் என்பது கறைபடிந்ததாக இருக்கிறது. அவர்கள் வேலை செய்யாமல், மக்கள் பணத்தில் இருந்து ஊதியத்தையும், ஓய்வூதியமும் பெறுவார்கள்.
முன்னாள் எம்.பி.கள் பலர் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். முன்னாள் எம்.பி.யின் பிள்ளைகள் உத்தரப்பிரதேசத்தில் கூலிவேலையும், ஓவியர்களாகவும் உள்ளார்கள்'' என்றார்.

காங்கிரஸ் எம்.பி. ஜெய் ராம் ரமேஷ் பேசுகையில், “ 80 சதவீத முன்னாள் எம்.பி.கள் கோடீஸ்வரர்கள் என்ற விசயம் என்னை வியப்படைய வைத்தது'' என்றார்.
அதிகாரம் இல்லை
இதற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசுகையில், “ மக்களின் பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது கேள்விக்கு இடமின்றி, நாடாளுமன்றத்துக்கு உட்பட்டது. மக்களின் பணம், நாடாளுமன்றம் அதிகாரம் அளித்த பின் தான் செலவு செய்யப்பட வேண்டும். ஆதலால், எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வது நாடாளுமன்றம்தான்.
வேறு எந்த நிறுவனத்துக்கு இதை முடிவு செய்ய அதிகாரமில்லை. எம்.பி.களுக்கு ஓய்வூதியம் வழங்குவது என்பது, நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இது அரசியமைப்பு பதவி. இதை அனைத்து துறைகளும் இதை ஏற்றுக்கொண்டுள்ளன’' எனத் தெரிவித்தார்.
