முன்னாள் மத்திய நிதியமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். 

கடந்த 9ம் தேதி உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் ஜெட்லிக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சையளித்து வந்தபோதிலும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தது. இந்நிலையில், இன்று மதியம் 12.08 மணிக்கு அருண் ஜெட்லி காலமானார். அவருக்கு வயது 66.

மத்திய நிதியமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், செய்தி மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் என அரசியலில் பல உயர் பதவிகளில் இருந்த அருண் ஜெட்லி, அரசியலுடன் மட்டும் தொடர்புடையவர் அல்ல. கிரிக்கெட்டுடனும் தொடர்புடையவர். டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார் அருண் ஜெட்லி. 

டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் அருண் ஜெட்லி இருந்துள்ளார். அருண் ஜெட்லி தலைவராக இருந்தபோது, ஊழல் செய்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். டெல்லியில் முதல்வர் அலுவலகத்தில் கடந்த 2016ம் ஆண்டு சிபிஐ சோதனை நடத்தியபோது, அருண் ஜெட்லி ஊழல் செய்தது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றவே தனது அலுவலகத்தில் சோதனை நடந்ததாக கெஜ்ரிவால் தெரிவித்தார். 

ஆனால் தன் மீது குற்றம்சாட்டிய கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியினர் மீது ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு போட்ட அருண் ஜெட்லி, அதுகுறித்த விசாரணைக்கு நேரில் ஆஜரானபோது, டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தை விரிவாக்கம் செய்தபோது நான் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு சொல்கிறார்கள். டிடிசிஏ இயக்குநர்கள் வாரியம் நியமித்த குழுதான் இந்தப் பணியை கண்காணித்தது என்று விளக்கமளித்தார். 

இந்த விவகாரத்தில் அருண் ஜெட்லி மீது குற்றம்சாட்டிய அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அசுதோஷ், சஞ்சய் சிங், ராகவ் சந்தா ஆகியோர் அருண் ஜெட்லியிடம் மன்னிப்புக்கேட்டு கடிதம் ஒன்றை எழுதினர். 

அதில், செய்தித்தாள்களில் வந்த செய்திகள் மற்றும் என்னிடம் தனிப்பட்ட முறையில் சிலர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் நீங்கள் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டிவிட்டோம்.  இந்த குற்றச்சாட்டின் காரணமாக உங்கள் நன்மதிப்புக்கு ஏற்பட்ட களங்கத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். எனது இந்த மன்னிப்பை ஏற்று, நீதிமன்றத்தில் எங்கள் மீது தொடர்ந்திருக்கும் அவதூறு வழக்கை திரும்பப் பெற வேண்டும் என கோரியிருந்தனர்.

கெஜ்ரிவாலின் மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக்கொண்ட பெருந்தன்மை கொண்டவர் அருண் ஜெட்லி.