ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது அரசியலமைப்பை இரண்டாக கிழிக்கும் செயல் என வைகோ மாநிலங்களவையில் ஆவேசமாக பேசியுள்ளார். 

ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அறிவித்தார். மேலும், மாநில அந்தஸ்தை இழந்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதற்கு, தமிழக எம்.பி.க்களான திருச்சி சிவா, வைகோ ஆகியோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். 

அப்போது, மதிமுக எம்.பி. வைகோ பேசுகையில் மத்திய அரசு மீண்டும் எமெர்ஜென்சியை கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார். பாஜக காஷ்மீரில் ஜனநாயகப் படுகொலையில் ஈடுப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களுக்கு நேரு அளித்த வாக்குறுதியை மீறி இருக்கிறது மத்திய அரசு. காஷ்மீருக்கு நாம் கொடுத்த சத்தியத்தை மீறி இருக்கிறோம். அப்பகுதி மக்களை நாம் ஏமாற்றி இருக்கிறோம். இதை பார்க்கும் போது என் இரத்தம் கொதிக்கிறது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது அரசியலமைப்பை இரண்டாக கிழிக்கும் செயல் என்றார். 

காஷ்மீரை பாதுகாக்க கார்கில் யுத்தத்தில் தமிழக இளைஞர்கள் ரத்தம் சிந்தினர். ஆனால் இன்று தமிழர்கள் உட்பட காஷ்மீர் மக்களின் உணர்வை ஓட்டுமொத்தமாக மத்திய அரசு புண்படுத்திவிட்டது என வைகோ பேச்சு நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.