மணிப்பூரில் ராணுவ அதிகாரி கடத்தல்: வன்முறை தொடங்கியதில் இருந்து 4ஆவது சம்பவம்!
மணிப்பூரில் ராணுவ அதிகாரி அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மணிப்பூரில் ராணுவ அதிகாரி அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்டுள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் இனக்கலவரம் வெடித்ததில் இருந்து இது 4ஆவது சம்பவம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிப்பூர் மாநிலம் தௌபால் மாவட்டத்தில் வசிக்கும் ஜூனியர் கமிஷன் அதிகாரி (ஜேசிஓ) கொன்சம் கேதா சிங் என்பவர், இன்று காலை 9 மணியளவில் அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்டுள்ளார். வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கடத்தி சென்றதாக தெரிகிறது.
“இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஜூனியர் கமிஷன் அதிகாரியை மீட்பதற்காக அனைத்து பாதுகாப்பு அமைப்புகளாலும் ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை 102இல் அனைத்து வாகனங்களையும் நாங்கள் சோதனை செய்து வருகிறோம். அவர் ஏன் கடத்தப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் அதை விசாரித்து வருகிறோம்.” என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் மக்கள்தொகையில் சுமார் 53 சதவீதமான மைதேயி சமூக மக்கள் இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர். அதே சமயம் நாகாக்கள் மற்றும் குக்கிகள் உட்பட 40 சதவீத பழங்குடியினர் பெரும்பாலும் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர். அம்மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின சமூலம் நடத்திய பேரணியின்போது, வன்முறை வெடித்தது. கடந்த ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி வெடித்த இனக்கலவரம் அம்மாநிலத்தில் இன்னும் ஓயவில்லை. ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் இனக்கலவரம் வெடித்ததில் இருந்து இது 4ஆவது சம்பவமாக ராணுவ அதிகாரி கடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.