விடுமுறை எடுத்துச் சென்ற ராணுவ வீரர் மாயம்... ஜம்மு காஷ்மீரில் தேடும் பணி தீவிரம்
ராணுவ வீரர் ஜாவித் அஹ்மத்தை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக ஜம்மு காஷ்மீரின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அஸ்தல் பகுதியில் இருந்து சனிக்கிழமை மாலை ராணுவ வீரர் ஒருவர் காணாமல் போயிருக்கிறார். முஹம்மது அயூப் வானியின் மகன் ஜாவித் அஹ்மத் வானி என அடையாளம் காணப்பட்ட ராணுவ வீரர், அஸ்தலில் வசிப்பவர்.
லடாக்கில் உள்ள லே என்ற இடத்தில் பணியமர்த்தப்பட்ட ஜாவித் அஹ்மத், விடுமுறையில் இருந்தார். "நேற்று மாலை, அவர் தனது ஆல்டோ வாகனத்தில் (பதிவு எண் JK-18B 7201) சில உணவுப் பொருட்களை வாங்குவதற்காக சாவல்காம் பகுதிக்கு சென்றார். அதன்பிறகு அவர் திரும்பவில்லை'' என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில், காணாமல் போன ராணுவ வீரரின் தாயார், தனது மகனைக் கண்டுபிடித்து தங்களிடம் சேர்க்குமாறு வலியிறுத்தி வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். "என் மகன் நிரபராதி. என் மகன் ஏதேனும் தவறு செய்திருந்தால் நான் மன்னிப்புக் கோருகிறேன். என் மகன் வீடு திரும்ப உதவுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.
ஜாவித் அஹ்மத் காணாமல் போனது தொடர்பாக போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தேடும் பணி தொடங்கம்பபட்டுள்ளது. "ராணுவ வீரரை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது" என ஜம்மு காஷ்மீரின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.