கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் அங்கிருக்கும் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது. இந்த வெள்ளத்தில் சிக்கியும், வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியும் 73 பேர் இதுவரை பலியாகி இருக்கின்றனர். 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இன்னும் மழை நிற்காமல் பெய்து கொண்டுதான் இருக்கிறது. இந்த சூழலில் தேசிய பேரிடர் மீட்பு வீரர்களும் பொது மக்களும் இணைந்து தீவிரமாக மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். இந்த மீட்பு பணிகளின் போது வீரர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களை மீட்கும் செயல்கள் இந்தியர் அனைவரையுமே பிரமிக்க செய்து பெருமை கொள்ள வைத்திருக்கிறது அப்படி ஒரு செயல் மலப்புழா பகுதியிலும் நடந்திருக்கிறது.

கேரளாவில் உள்ள மலப்புழா எனும் பகுதியில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து கொண்டிருந்த செய்தி இந்த மீட்பு குழுவிற்கு கிடைத்திருக்கிறது. உடன் அங்கு விரைந்து சென்ற இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் மக்களை மீட்க அங்கு கிடைத்த மரம் போன்ற பொருள்களை கொண்டு உடனடியாக 35 அடியில் ஒரு பாலத்தை கட்டி அங்கிருந்த மக்களை அங்கிருந்து வேறு இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்றிருக்கின்றனர். 

அதிவேகமாக 35 அடி நீள பாலத்தை அவர்கள் உருவாக்கிய அந்த புல்லரிக்கும் தருணம் இணையத்தில் வைரல் ஆகி பாராட்டுக்களை பெற்று தந்திருக்கிறது. இந்த பாலத்தை உருவாக்கிட அங்கிருந்த பொது மக்களும் உதவினர் என்பது கூடுதல் சிறப்பு.