ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது நேற்று முன்தினம் வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 40-க்கு மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிவசந்திரன் பலியாகி உள்ளார். அரியலூர் மாவட்டம் , உடையார்பாளையம் தாலுகா தா.பழூர் அருகே கார்குடி கிராமத்தில் உள்ள காலனி தெருவை சேர்ந்தவர் சின்னையன். இவரது 2-வது மகன்தான் சிவசந்திரன் . எம்.ஏ. பிஎட். பட்டதாரியான இவருக்கு நாட்டின் மீது அதிக பற்று ஏற்பட்டதால், ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் கடந்த 2010-ம் ஆண்டில் நடந்த ராணுவத்திற்கான ஆட்கள் தேர்வில் கலந்து கொண்டு தேர்வானார். 

சிவசந்திரன் அதே  கிராமத்தை சேர்ந்த காந்திமதி  என்கிற பெண்ணை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது 2 வயதில் சிவமுனியன் என்கிற மகன் உள்ளான். மேலும் காந்திமதி தற்போது கர்ப்பமாக உள்ளார். 

கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி சிவசந்திரன் காஷ்மீரில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

பின்னர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து விட்டு, கடந்த வாரம் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று தரிசனம் செய்தார். பின்னர் விடுமுறை முடிந்து மீண்டும் ராணுவத்தில் பணியாற்ற கடந்த 9-ந் தேதி சிவசந்திரன் சொந்த ஊரில் இருந்து புறப்பட்டு காஷ்மீர் சென்றார்.