உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோத இறைச்சிக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அமைச்சரவையில் உள்ளவர்கள் பெரும்பாலும் சைவம் சாப்பிடுபவர்கள்தான், அவர்கள் என்ன சோர்ந்துபோய் வீட்டார்களா, பலசாலி இல்லையா எனப் பேசி புதிய சிக்கலை முதல்வர் ஆதித்யநாத் உருவாக்கியுள்ளார்.

சட்டவிரோத இறைச்சிக்கடைகளை மூடுவது மாசுக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவுதான் என்ற போதிலும், அதில் அங்கீகாரம் உள்ள கடைகளையும் பா.ஜனதா அரசு மூடி வருகிறது என்று சிறுபான்மையின அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனால், மாநிலத்தில் இறைச்சிக்கடைகளை மூடிய விவகாரம் சற்று பதற்றத்துடனே இருந்து வருகிறது.

இந்நிலையில், லக்னோவில் உள்ள அறிவியல் மாநாட்டு அரங்கில் பா.ஜனதா கட்சியின் தேசிய அளவிலான 2 நாள் பயிலரங்கு நேற்று தொடங்கியது. அதில் கலந்து கொண்டு முதல்வர் ஆதித்யநாத் பேசியதாவது-

நான் சுத்த சைவம். வெங்காயம், பூண்டுகூட சாப்பிட மாட்டேன். அதற்காக நான் சோர்ந்து போய்விட்டேனே. என் அமைச்சரவையில் இருப்பவர்களில் பெரும்பாலும் சைவம் சாப்பிடுவர்கள்தான் அவர்கள் என்ன சோர்ந்துபோய்விட்டார்களா?

மாநிலத்தில் உள்ள அமைச்சர்கள் தங்கள் பணியை காலை 7 மணிக்கு தொடங்கி, அதிகாலை 1 மணி வரை செய்கிறார்கள். இவ்வளவு நீண்டநேரம் யாரால்?, எந்த உணவு சாப்பிடுபவர்களால் முடியும்.

நான் பதவி ஏற்றவுடன் முக்கிய சாதனையாக, பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் நபர்களை பிடிக்க ஆன்ட்டி ரோமியோ படையை அமைத்தேன். அந்த படையினர், இப்போது 24 மணிநேரமும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறார்கள்

பா.ஜனதா ஆட்சியில் இருப்பதை கட்சியின் தொண்டர்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. 

அவர்களுக்கு அதிகமான பொறுப்பு இருக்கிறது. பாஜனதா அரசு மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை உடைந்துவிடாமல் பார்க்க வேண்டியது அவர்கள் பொறுப்பாகும். சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது.

வளர்ச்சியின் மீதும், நாட்டுப்பற்றும் இருப்பவர்கள் மட்டுமே இங்கு செயல்பட முடியும். தலைவர்கள் வரும் போது தொண்டர்கள் அவர்களுக்கு பூங்கொத்துக்களையும், சால்வைகளும் அளிப்பதை தவிர்க்க வேண்டும்.

அனைத்து அமைச்சர்களும் தங்களின் மாவட்டத்தை பார்வையிட வேண்டும். தலைவர்கள் தொண்டர்கள் வரவேற்க பூங்கொத்து கொடுப்பதற்கு பதிலாக, கிராமங்களையும், நகரத்தையும் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்.

என்னுடைய ஆட்சியின் மணல், குவாரி, மாபியாக்கள் முடிவுக்கு கொண்டு வரப்படுவார்கள். அனைத்து வகையான ஒப்பந்தங்களும், மின்னணு டெண்டர்கள் மூலமே விடப்பட்டு, வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.