Apologizes to the girl helping the collectors MLA

ஆயிரக்கணக்கில் திரண்டு மறியலில் ஈடுபட்ட மக்கள் முன்னிலையில், பெண் உதவி கலெக்டரை தாறுமாறாக திட்டிய எம்.எல்.ஏ. ஒருவர் மன்னிப்பு கேட்டார்.

உதவி கலெக்டர் விஜயா

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள குன்னத்துக்கல் கல்குவாரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீது பாறை விழுந்தது. இதில் 2 பேர் பலியானார்கள். 6 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்ககக் கோரி, ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் சமரசம் பேசுவதற்கு உதவி கலெக்டர் விஜயா சென்றார்.

கடுமையாக திட்டினார்

அப்போது அங்குவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்நத பாரசாலா எம்.எல்.ஏ ஹரீந்திரன், உதவி கலெக்டர் விஜயாவை கடுமையாக திட்டினார்.

"உனக்கெல்லாம், யார் இது போன்ற முக்கிய பொறுப்பை கொடுத்தது" என கடுமையாக பேசி உள்ளார். எம்.எல்.ஏ., உடன் வந்த மற்றொரு கட்சி பிரமுகரும் அவரை திட்டி உள்ளார்.

வாக்குவாதம்

அதைத் தொடர்ந்து போலீசார், பொது மக்கள் முன்னிலையில் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. பின்னர் சிலர் எம்.எல்.ஏ.,வை அங்கிருந்த அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பாக எம்.எல்.ஏ.,விடம் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்து, அந்த எம்.எல்.ஏ. கூறியதாவது-

தாக்க வந்தனர்

‘‘விபத்து தொடர்பாக நடந்த கலெக்டர் ஆலோசனை கூட்டத்தில், முதல் கட்டமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.15,000 மருத்துவ செலவுக்கும் அளிப்பதாக முடிவு செய்யப்பட்டது.

ஆனால் உதவி கலெக்டர் அதனை மக்களிடம் தெரிவிக்காமல், தேவையற்ற கலவர சூழல் உருவாக காரணமாக இருந்தார். தாமதமாக அறிவித்ததால் அங்கிருந்த மக்கள் உதவி கலெக்டரை தாக்க வந்தனர்.

காப்பாற்றுவதற்காக

அதனால் அவரை அங்கிருந்து செல்லும்படி கூறியும் அவர் செல்லவில்லை. அதனால்தான், அவரை கூட்டத்தினரிடம் இருந்து காப்பாற்றுவதற்காக கடிந்து கொண்டேன்’’.

இவ்வாறு தன்னை நியாயப்படுத்தி அவர்விளக்கம் அளித்தார்.

மன்னிப்பு கேட்டார்

ஆனால், இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த கேரள மகளிர் ஆணையம், உதவி கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ., மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதனையடுத்து அந்த எம்.எல்.ஏ. உதவி கலெக்டரிடம் மன்னிப்பு கேட்டார்.