Asianet News TamilAsianet News Tamil

எளிமையான தொடக்கம் முதல் மகத்தான சாதனைகள் வரை.. ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் வாழ்க்கை பயணம்

ஒரு செய்தித்தாள் போடும் சிறுவனாக இருந்து ஒரு சிறந்த விஞ்ஞானி, ஜனாதிபதி மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மாபெரும் மனிதனாக மாறிய அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

APJ Abdul Kalm death anniversary From humble beginnings to Enormous achievements.. Here is the journey of Missile Man Abdul Kalam..
Author
First Published Jul 27, 2023, 10:42 AM IST

'ஏவுகணை நாயகன்' என்றும், 'மக்கள் ஜனாதிபதி' என்றும் அழைக்கப்படும் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று. அவர் 2015 ஆம் ஆண்டு, ஷில்லாங்கில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் மாணவர்களுக்கு விரிவுரையாற்றிய போது, தனது 83வது வயதில் மாரடைப்பால் காலமானார். அப்துல் கலாமின் 8-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டாக்டர் அப்துல் கலாமின் மகத்தான சாதனைகள் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி, அவரை வரலாற்றில் ஒரு புகழ்பெற்ற நபராக மாற்றி உள்ளது. 

ஒரு செய்தித்தாள் போடும் சிறுவனாக இருந்து ஒரு சிறந்த விஞ்ஞானி, ஜனாதிபதி மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மாபெரும் மனிதனாக மாறிய அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

பிறப்பு, ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

1931-ம் ஆண்டு அக்டோபர் 15, ராமேஸ்வரத்தில், படகு உரிமையாளர் ஜெய்னுலாப்தீன் மற்றும் ஆஷியம்மா ஆகியோருக்குப் அப்துல்கலாம் பிறந்தார், கலாம் தனது ஐந்து உடன்பிறப்புகளில் இளையவர். நீண்ட தூரம் நடந்து சென்றே தனது ஆரம்பக் கல்வியை பயின்ரார். பொருளாதாரத்தில் பின் தங்கி, வறுமையில் வாடிய குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் பள்ளியில் படிக்கும் போது தனது நகரத்தில் செய்தித்தாள்களை விநியோகித்தார். 

சென்னையின் 5 பழமையான ஹோட்டல்கள்.. சிவாஜி முதல் சூர்யா வரை.. பல பிரபலங்களின் ஃபேவரைட் ஸ்பாட்..

சிறு வயதிலிருந்தே, விமானங்கள், ராக்கெட்டுகள் மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் அப்துல்கலாமுக்கு ஆழ்ந்த ஈர்ப்பு இருந்தது. 8 ஆம் வகுப்பு வரை ராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் பயின்ற அவர், ராமநாதபுரத்தில் உள்ள ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து படித்தார். பின்னர் அவர் திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார், 1954-ல் பட்டம் பெற்றார். விண்வெளித் துறையில் இருந்த ஆர்வத்தால் சென்னையிலுள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) இல் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்தார்.

APJ Abdul Kalm death anniversary From humble beginnings to Enormous achievements.. Here is the journey of Missile Man Abdul Kalam..

'இந்தியாவின் ஏவுகணை நாயகன்'

1958-ம் ஆண்டில், அப்துல் கலாம் ஏரோநாட்டிக்கல் தர உத்தரவாதத்தின் பொது இயக்குநரகத்தில் மூத்த அறிவியல் உதவியாளராக சேர டெல்லி சென்றார். அந்த ஆண்டின் பிற்பகுதியில், அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஒரு பகுதியாக ஆனார், அங்கு அவர் ஒரு சிறிய ஹோவர்கிராஃப்ட் வடிவமைப்பில் பங்களித்தார். 1969 ஆம் ஆண்டில், அவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) ஒரு ராக்கெட் பொறியாளராக சேர்ந்தார்.

1969 முதல் 1982 வரை இஸ்ரோவில் பணியாற்றிய போது, ராக்கெட் ஏவுதள அமைப்புகளை நிறுவுவதில் அப்துல் கலாம் முக்கிய பங்கு வகித்தார். 1980-ல், SLV-3 இன் திட்ட இயக்குநராக இருந்த அவர், ரோகினி செயற்கைக்கோளை பூமிக்கு அருகிலுள்ள சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம் மதிப்புமிக்க விண்வெளி கிளப்பில் இந்தியா உறுப்பினராக இருந்தது. அவரது அர்ப்பணிப்பு அக்னி, திரிசூல், ஆகாஷ் மற்றும் நாக் என நான்கு ஏவுகணைகளை உருவாக்க வழிவகுத்தது.

மே 1998ல், அவர் அப்போதைய பிரதமர் அடல் பிகார் வாஜ்பாயின் தலைமை அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றியபோது, இந்தியா பொக்ரான்-II அணுகுண்டு சோதனைகளை நடத்தியது. பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஏவுதல் தொழில்நுட்பத்தில் அப்துல்கலாம் முக்கிய பங்காற்றினார். இது அவருக்கு 'இந்தியாவின் ஏவுகணை நாயகன்' என்ற மரியாதைக்குரிய பட்டத்தைப் பெற்றுத் தந்தது.

‘மக்கள் ஜனாதிபதி’

டாக்டர் அப்துல் கலாம் 2002 முதல் 2007 வரை இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பணியாற்றினார். நாடு முழுவதும் பயணம் செய்வதில் ஆர்வமாக இருந்த அப்துல் கலாம், பல்வேறு பின்னணி கொண்ட மக்கள் குறிப்பாக இளைஞர்களுடன் உரையாடுவதை விரும்பினார். குடியரசு தலைவர் மாளிகையில்  அவர் பள்ளிக் குழந்தைகளுடன் உரையாடி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். குழந்தைகளின் ஆர்வத்தை வளர்ப்பதில் உண்மையான ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

தனது ஜனாதிபதி பதவிக் காலத்திற்குப் பிறகும், டாக்டர் அப்துல்கலாம் நாடு முழுவதும் பயணம் செய்து பள்ளிகளுக்குச் சென்றார், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றி வந்தார். தனது அனுபவங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். டாக்டர் அப்துல் கலாமை அனைத்து தரப்பு மக்களும் விரும்பினர்.  நாட்டின் உயரிய பதவியில் இருந்தாலும், அவரின் அடக்கம். எளிமை, நேர்மை மற்றும் வாழ்க்கையைப் பற்றிய உற்சாகமான கண்ணோட்டம் லட்சக்கணக்கான மக்களை ஈர்த்தது. மேலும் யாரும் அவரை எளிதில் அணுகலாம் என்ற இயல்பு, அவருக்கு 'மக்கள் ஜனாதிபதி' என்ற பட்டத்தை பெற்றுத் தந்தது.

APJ Abdul Kalm death anniversary From humble beginnings to Enormous achievements.. Here is the journey of Missile Man Abdul Kalam..

சாதனைகள், அங்கீகாரங்கள் மற்றும் விருதுகள்

டாக்டர் அப்துல் கலாம் 2013 இல் PURA (கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகளை வழங்குதல்) பொருளாதார மேம்பாட்டு மாதிரியை அறிமுகப்படுத்தினார், நகர்ப்புற வசதிகள் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை கிராமப்புறங்களுக்கு கொண்டு வரும் அதே வேளையில் நகர்ப்புற-கிராமப்புற பிளவைக் குறைக்கும் நோக்கத்துடன். 2012 ஆம் ஆண்டில், அப்துல் கலாம் இருதயநோய் நிபுணர் டாக்டர் சோம ராஜுவுடன் இணைந்து, 'கலாம்-ராஜூ ஸ்டென்ட்' உருவாக்கினார், இது அனைவருக்கும் குறைந்த செலவில் சுகாதார சேவையை அணுகுவதை நோக்கமாகக் கொண்டது. அதே ஆண்டில், இருவரும் இந்தியாவின் கிராமப்புறங்களில் சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட டேப்லெட் கணினியை வடிவமைத்தனர்.

அதே ஆண்டில் டாக்டர் கலாம் ஊழலை எதிர்த்துப் போராட இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட 'நான் என்ன கொடுக்க முடியும்' திட்டத்தைத் தொடங்கினார். டாக்டர் கலாம், தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் பேராசிரியராகவும் பணியாற்றினார். திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் வேந்தராகவும், ஷில்லாங், அகமதாபாத் மற்றும் இந்தூரில் உள்ள ஐஐஎம்களில் சிறப்பு பேராசிரியராகவும் பதவி வகித்தார். பெங்களூரு ஐஐஎஸ்சியில் கவுரவ உறுப்பினராகவும் இருந்தார்.

டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதி தமிழகத்தில் இளைஞர் மறுமலர்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. பீகார் அரசு கிஷன்கஞ்சில் உள்ள ஒரு விவசாயக் கல்லூரிக்கு டாக்டர் கலாம் விவசாயக் கல்லூரி என்று பெயர் மாற்றியது. இதேபோல், உத்தரபிரதேச மாநில அரசு உத்தரபிரதேச தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை (UPTU) ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்று மாற்றி அவரை கவுரவித்தது.

2010ம் ஆண்டு அப்துல் கலாமின் 79 வது பிறந்தநாளில் அவரது உலகளாவிய செல்வாக்கை அங்கீகரிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 15 ஆம் தேதியை 'உலக மாணவர் தினமாக' அறிவித்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பிரத்தியேகமாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு உயிரினத்திற்கு நாசா விஞ்ஞானிகள், டாக்டர் கலாமின் பெயரை வைத்தனர். டாக்டர் கலாமின் பெருமை விண்வெளியில் கூட நிலைத்து நிற்கிறது.

அவரது வாழ்நாள் முழுவதும், டாக்டர் கலாம் உலகெங்கிலும் உள்ள 40 வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றார். அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் அவர் ஆற்றிய சிறப்புப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பத்ம பூஷன் (1981), பத்ம விபூஷன் (1990), மற்றும் பாரத ரத்னா (1997) போன்ற விருதுகள் வழங்கப்பட்டன.

APJ Abdul Kalm death anniversary From humble beginnings to Enormous achievements.. Here is the journey of Missile Man Abdul Kalam..

 எழுத்தாளராக அவரது சிறந்த படைப்புகள்

பல பிரபலமான புத்தகங்களை டாக்டர் கலாம் எழுதியுள்ளார். குறிப்பாக India 2020 - A Vision for the New Millennium (1998), Wings of Fire: An Autobiography (1999), Ignited Minds - Unleashing the power within India (2002), Turning Points (2012), My Journey - Transforming Dreams into Actions (2013), and Failure is a Teacher (2018) ஆகியவை அதில் அடங்கும்

இறப்பு

தனது கடைசி மூச்சு வரை இளைஞர்களை ஊக்குவிப்பதில் தன்னை அர்ப்பணித்தார் அப்துல் கலாம். ஜூலை 27, 2015 அன்று, ஐஐஎம் ஷில்லாங்கில் மாணவர்களுக்கு சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தபோது, மாரடைப்பு காரணமாக மேடையில் சரிந்து விழுந்து தனது 83வது வயதில் காலமானார். ஆனால், அறிவியல் துறையில் அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகள், தலைமுறை தலைமுறையாக இளைஞர்களை ஊக்குவிக்க அவர் செய்த அயராத அர்ப்பணிப்பு ஆகியவை மூலம் மில்லியன் கணக்கான இதயங்களில் அப்துல் கலாம் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

புறக்கணித்த பாலிவுட்.. தற்போது சீனாவில் பிரபல நடிகராக உள்ள இந்தியர்.. யார் இந்த தேவ் ரத்துரி?

Follow Us:
Download App:
  • android
  • ios