Anyone who does not know Hindi can not become prime minister Former President Pranab Mukherjee pain

இந்தியாவில் இந்தி தெரியாத யாரும் பிரதமர் ஆக முடியாது அதேசமயம், பிரதமராக என்னைக்காட்டிலும் மன்மோகன்சிங் தான் தகுதியானவர் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளிப்படையாக பேசியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்தியாடுடேவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் எனக்கு சிறந்த நட்புறவு இருந்தது. அப்படி இருந்தும், பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை அவர் தேர்ந்தெடுத்தார். அதற்காக நான் சிறிதுகூட ஏமாற்றமும், வருத்தமும் அடையவில்லை. அந்த பதவிக்கு நான் தகுதியானவர் இல்லை என கணித்துக்கொண்டேன். நான் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தேன். 2004-ம் ஆண்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். மன்மோகன்சிங் எனது நீண்டகால நண்பர். அவர்தான் பிரதமர் பதவிக்கு தகுதியான நபர்.

எனக்கு இந்தி தெரியாது. இந்தி தெரியாமல் இந்தியாவில் யாரும் பிரதமர் ஆக முடியாது. இந்தி தெரியவில்லை என்றால் பிரதமர் பதவி இல்லை என்று மறைந்த காமராஜரே கூறியுள்ளார். மன்மோகன் சிங் மீது சோனியா காந்தி நம்பிக்கை வைத்து இருந்தார். அவர்தான் அந்த பதவிக்கு சரியான தேர்வு என நானும் நன்கு உணர்ந்து இருக்கிறேன்.

அரசியல் நுணுக்கம், மற்றும் நிர்வாகத்தில் அவர் நல்ல அனுபவம் வாய்ந்தவர். மன்மோகன் சிங்குடன் பணியாற்றியதில் எனக்கு எந்த வித பிரச்சினையும் ஏற்படவில்லை.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.