anyone can use any hotel bathrooms in karnataka

சாலையில் பொதுக்கழிப்பிடங்கள் இல்லாத நிலையில், இயற்கை உபாதைகளை கழிக்கவேண்டியது வந்தால், ஆண்களும், பெண்களும் படும் அவஸ்தை சொல்லிமாளாது.

அதுவே ஒரு ஓட்டலில் உள்ள கழிப்பறையை பயன்படுத்த வேண்டுமென்றால், அங்கு நாம் குறைந்தபட்சம் ஒரு குவளை தேநீர், அல்லது காபி, குளிப்பானங்களாவது குடித்தால்தான் அந்த வசதியை அனுப்பவிக்க முடியும்

இதை உணர்ந்த கர்நாடக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும், திடீரென வரும் இயற்கை உபாதையை, கழிக்க எந்த ஓட்டலில் கழிப்பறையையும் பயன்படுத்திக்கொள்ளலாம், கட்டணமோ, அல்லது அந்த ஓட்டலில் சாப்பிடவோ, அல்லது ஏதோனும் பொருட்கள்வாங்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக பெண்களின் நலன்கொண்டு இந்த தீர்மானம் இயற்றப்பட்டு, நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தெற்கு டெல்லியில் உள்ள எந்த ஓட்டலிலும் பெண்கள், குழந்தைகள் யார் வேண்டுமானாலும், எந்த ஓட்டலிலும் கட்டணமின்றி கழிப்பறையை பயன்படுத்திக்க கொள்ள அங்குள்ள ஓட்டல் உரிமையாளர்கள் அமைப்பு அனுமதித்துள்ளது. அதைப்பின்பற்றி கர்நாடாகத்திலும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கர்நாடக ஓட்டல் உரிமையாளர்கள் அமைப்பின் தலைவர் பி.சி.ராவ் கூறுகையில், “ கர்நாடாகவில் சாலைகளில் பெரும்பாலும் பொதுக்கழிப்பறை இல்லாத சூழல்தான் இருக்கிறது. ஓட்டல்களில் மட்டும்தான் கழிப்பறை வசதி இருக்கிறது.

ஆனால், ஓட்டல், ரெஸ்டாரன்ட்களில் கழிப்பறையை மட்டும் பயன்படுத்த எந்த நபரையும் அனுமதிப்பது இல்லை.ஆனால், நாங்கள் கொண்டுவந்துள்ள தீர்மானத்தின்படி, புதன்கிழமை முதல்(இன்று) கர்நாடகத்தில் உள்ள எந்த ஓட்டல், ரெஸ்டாரன்ட்களிலும் கழிப்பறையை யார் வேண்டுமானாலும், இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த முடிவை நாங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துவிட்டோம். யாரும் நடைமுறைப்படுத்த தயாராக இல்லை. ஆனால், பெரும்பாலும் உயர் தர காபிஷாப், பப்கள், ரெஸ்டாரன்ட்களில் இதுபோல் யாரையும்அனுமதிப்பது இல்லை.

எங்களின் இப்போதைய உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனக்கூறியிருப்பதால், இனி சாமானிய மக்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது. கழிப்பறையை பயன்படுத்தியதற்காக அந்த ஓட்டலில் ஏதேனும் வாங்கவோ, சாப்பிடவோ அவசியம் இல்லை. கர்நாடக மாநிலம் முழுவதும் இந்த திட்டம் பொருந்தும்” எனத் தெரிவித்தார்.

பெங்களூரு மேயர் ஜி. பத்மாவதி கூறுகையில், “ பெண்கள், குழந்தைகளுக்காக அனைத்து ஓட்டல்கள்,ரெஸ்டாரண்ட் கழிப்பறையை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என ஓட்டல் உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்து இருந்தேன். அது இப்போது நிறைவேறியுள்ளது” எனத் தெரிவித்தார்.