கனடாவில் இந்தியா விரோத நடவடிக்கைகள்; ஜஸ்டின் ட்ரூடோவிடம் வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி!!
ஜி20 மாநாட்டின் இடையே நடந்த கூட்டத்தில், கனடாவில் "தீவிரவாத சக்திகளால்" மேற்கொள்ளப்பட்டு வரும் "இந்தியா-விரோத நடவடிக்கைகள்" குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் பிரதமர் நரேந்திர மோடி தனது கவலைகளை தெரிவித்தார்.
டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டார். இந்த நிலையில் கனடாவில் இந்தியாவுக்கு எதிராக நடந்து வரும் தீவிரவாத இயக்கங்களின் செயல்கள் குறித்து பிரதமர் மோடி வருத்தப்பட்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டு இருந்த அறிக்கையில், ''கனடாவில் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான செயல்கள் நடந்து வருகிறது. இந்திய தூதர்களுக்கு, அதிகாரிகளுக்கு எதிராக பிரிவினைவாதம் மற்றும் வன்முறையைத் தூண்டி வருகின்றனர். இதுமட்டுமின்றி கனடா வாழ் இந்தியர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி, வழிபாட்டு தளங்களில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றனர்.
இந்தியா-கனடா உறவுகள் ஜனநாயக மதிப்புகளுடன், வலுவான மக்கள் - மக்கள் உறவுகள் மூலம் வரையறுக்கப்படுகின்றன என்பதையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புவிசார் அரசியல் பிரச்சினைகள் ஜி20-யை பாதிக்கக் கூடாது: பிரேசில் அதிபர்!
கனடாவில் இந்த சக்திகள் தான் குற்றங்களில் ஈடுபடுகின்றன. போதைப்பொருட்களை கடத்தி, மனிதக் கடத்தலிலும் ஈடுபடுகின்றனர். இது மிகவும் கவலை அளிக்கிறது என்று பிரதமர் அலுவகம் மேலும் வலியுறுத்தியுள்ளது. இரண்டு நாடுகளும் இந்த விஷயத்தில் இணைந்து செயல்பட்டு, அச்சுறுத்தல்களை வேரறுக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படிபட்டவரா இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்; வைரலாகும் புகைப்படம்!!
ஜி20 மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடந்தது. நேற்று முடிவடைந்தது. இதில் கலந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமருக்கு நன்றி தெரிவித்து இருந்தார். நிழச்சிகள் பெரிய அளவில் நடத்தப்பட்டு, முடிவடைந்து இருப்பதாகவும் இதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டு இருந்தார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஜஸ்டின் ட்ரூடோவிடம், "காலிஸ்தான் தீவிரவாதம்" மற்றும் "வெளிநாட்டு தலையீடு" பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, ''கனடா எப்போதும் அமைதியான எதிர்ப்பு, கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கிறது. அதே வேளையில், கனடா தொடர்ந்து வன்முறையைத் தடுக்கும் மற்றும் வெறுப்பை எதிர்க்கும்.
"சமூகத்தில், சிலரின் செயல்கள் முழு சமூகத்தையும் அல்லது கனடாவையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மறுபக்கம், சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நாங்கள் எடுத்துரைத்து வருகிறோம். வெளிநாட்டு தலையீடு குறித்தும் ஆலோசித்து வருகிறோம்'' என்றார்.