அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மேலும் 119 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். 3ம் கட்டமாக இன்று இரவு 157 இந்தியர்கள் நாடு திரும்ப உள்ளனர்.
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்களை அந்த நாடு அதிரடியாக வெளியேற்றி வருகிறது. அதாவது மெக்சிகோ, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறிய நிலையில் அவர்கள் தங்கள் நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அதன்படி கடந்த 5ம் இந்தியாவைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் 104 பேரை அமெரிக்கா முதற்கட்டமாக திருப்பி அனுப்பி இருந்தது. இந்நிலையில், இரண்டாம்கட்டமாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மேலும் 119 இந்தியர்களை விமானம் மூலம் அமெரிக்கா அனுப்பியுள்ளது. இந்தியர்களை அழைத்து வந்த அமெரிக்க விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் நேற்று இரவு 11:40 மணியளவில் அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
10 நாட்களில் இரண்டாவது முறையாக அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மேலும் 157 இந்தியர்களுடன் மூன்றாவது விமானம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தவர்களில் 67 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், 33 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், எட்டு பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், மூன்று பேர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், கோவா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் தலா இரண்டு பேர், மேலு இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இதில் அடங்கும்.
அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் இந்தியா திரும்பியவர்களை அவர்கள் உறவினர்கள் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து வந்த இந்தியர்கள் பேருந்துகள் மூலம் அவர்கள் சொந்த மாநிலங்கள் மற்றும் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களின் கைகளில் விலங்கிட்டு அமெரிக்கா அழைத்து வந்தது. இந்தியா வந்தவுடன் அந்த விலங்குகள் அவிழ்க்கப்பட்டன.
இந்தியர்களை கை, கால்களில் விலங்கிட்டு அமெரிக்கா அழைத்து வருவதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. நாடு கடத்தப்படும் இந்தியர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என அமெரிக்காவுக்கு மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்த நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ''அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்படுவது புதிது அல்ல. காலம் காலமாக நடந்து வ்ருகிறது. நாடுகடத்தப்பட்டவர்கள் தவறாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அமெரிக்காவுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது'' என்றார்.
