பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சியான என்.டி.டி.விக்கு எதிராக 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ரிலையன்ஸ் நிறுவனம் அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.  ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரான்ஸ் நிறுவனமான டசால்ட்டுடன் இணைந்து செயல்பட இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. பாதுகாப்புத்துறை தளவாட உற்பத்தியில் முன் அனுபவம் இல்லாத அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் கிடைத்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார்.

 

முன் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரஃபேல் ஒப்பந்தத்தில் வாய்ப்பு அளித்ததன் மூலம் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மக்களிரின் வரிப்பணம் அனில் அம்பானி நிறுவனத்திற்கு செல்வதாகவும் ராகுல் தெரிவித்து வருகிறார். ஆனால் தகுதியின் அடிப்படையிலேயே ரிலையன்ஸ் நிறுவனத்தை ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மத்திய அரசும், பிரான்சின் டசால்ட் நிறுவனமும் தேர்வு செய்துள்ளதாக அனில் அம்பானி தரப்பு கூறி வருகிறது. இந்த நிலையில் என்.டி.டி.வி தொலைக்காட்சியில் கடந்த 29ந் தேதி ட்ரூத் வெர்சஸ் ஹைப் என்கிற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

 

இந்த நிகழ்ச்சியில் உண்மைக்கு மாறான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக ரிலையன்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் உள்நோக்கத்துடன் ரிலையன்ஸ் நிறுவன பெயரை கெடுக்கும் வகையிலும் நிகழ்ச்சியில் வாதங்கள் இடம்பெற்றதாகவும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. என்.டி.டி.வி ஒளிபரப்பிய ட்ரூத் வெர்சஸ் ஹைப் நிகழ்ச்சியால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறி அகமதாபாத் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 

உண்மைக்கு மாறான தகவல்களை விவாத நிகழ்ச்சியில் இடபெறச் செய்த என்.டி.டி.வியிடம் இருந்து 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு பெற்றுத்தர வேண்டும் என்றும் வழக்கில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 26ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது. குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள என்.டி.டி.வி., விவாத நிகழ்ச்சியில் பங்குபெற ரிலையன்ஸ் தரப்பில் இருந்து பலரை அணுகியுதாகவும் ஆனால் யாரும் முன்வரவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.