ஆந்திராவில் பயங்கரம்.. தடம் புரண்ட பயணிகள் ரயில்.. பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு - 18 பேருக்கு பலத்த காயம்!
இன்று அக்டோபர் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விசாகப்பட்டினத்திலிருந்து ஒடிசாவின் ராயகடா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் விஜயநகரம் மாவட்டம் அருகே சென்றபோது தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 18 பேர் காயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், விசாகப்பட்டினம் மற்றும் அனகாப்பள்ளி, விஜயநகரத்தின் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து முடிந்தவரை ஆம்புலன்ஸ்களை அனுப்பவும், அருகிலுள்ள மருத்துவமனைகளில் நல்ல மருத்துவ சேவையை வழங்க அனைத்து வகையான ஏற்பாடுகளைச் செய்யவும் உத்தரவிட்டுள்ளார் என்று முதல்வர் அலுவலக அறிக்கையை தெரிவிக்கின்றது.
"உடல்நலம், காவல்துறை மற்றும் வருவாய் உள்ளிட்ட பிற அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து விரைவான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கோர விபத்தில் 6 பயணிகள் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து கிழக்கு மத்திய ரயில்வே சிபிஆர்ஓ கூறுகையில், "விசியநகரத்திலிருந்து ராய்காட் நோக்கி பயணிகளுடன் பயணித்த ரயில், அதே வழித்தடத்தில் விசாகப்பட்டினத்திற்கு பலாசா செல்லும் பயணிகள் ரயிலில் மோதியதால், பெட்டிகள் தடம் புரண்டன என்றுதெரிவித்துள்ளது.
"பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ள, ஆனால் புள்ளிவிவரங்கள் இன்னும் அறியப்படவில்லை. இரண்டு ரயில்கள் விபத்தில் சிக்கியுள்ளன. மீட்பு மற்றும் மறுசீரமைப்பு செயல்முறை நடந்து வருகிறது" என்று ரயில்வே அதிகாரி மேலும் கூறினார்.
இந்த கோர நிகழ்வை தொடர்ந்து இன்று மாலை பாரத பிரதமர் மோடி அவர்கள், ரயில்வே அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை தொடர்புகொண்டு, அலமண்டா மற்றும் கண்டகபள்ளே பிரிவுக்கு இடையில் துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட இந்த ரயில் விபத்து குறித்து கேட்டறிந்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்து வருகின்றனர் என்று கூறிய பிரதமர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.