ஆந்திராவில் லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் சிறிய காயங்களுடன் 50 சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 50 பேர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு, பேருந்தில் சுற்றுலா சென்றனர். சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் சொகுசு பேருந்தில் மும்பை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அடுத்த நெலிவாடா  அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர், பேருந்து தடுப்பு சுவரை தாண்டி, எதிரே நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

பேருந்து மோதிய சில நிமிடங்களில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை சற்றும் எதிர்பாராத பயணிகள் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக 50 சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர். எனினும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.