ஆந்திர மாநிலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள நடிகை ரோஜா ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போது திடீரென செல்போன் காணமல் போனதால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.  

ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் ரோஜா

ஆந்திர மாநில அமைச்சரவை கடந்த வாரம் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடிகை ரோஜாவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து ஆந்திராவில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற விளையாட்டுத்துறை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் ரோஜா கலந்து கொண்டார். கூட்டம் முடிவடைந்ததும் தனது செல்போனை நடிகை ரோஜா தேடியுள்ளார். ஆனால் போன் எங்கே உள்ளது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகளும் செல்போனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிக்கைகளிலும் அமைச்சர் ரோஜாவின் செல்போன் திருட்டு என செய்தி வெளியானது.

காணமல் போன செல்போன்

இந்தநிலையில் அமைச்சர் ரோஜாவின் செல்போன் காணமல் போனது தொடர்பாக எஸ்வி பல்கலைக்கழக காவல் நிலைய உதவி ஆய்வாளர் என்.ரவீந்திரா கூறுகையில், பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அமைச்சர் ரோஜா ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது தனது உதவியாளர் ஒருவரிடம் செல்போனை அமைச்சர் கொடுத்துள்ளார்.ஆய்வுக்கூட்டம் முடிந்ததும் தனது செல் போனை ரோஜா தேடியுள்ளார். தனது உதவியாளரிடம் செல்போனை கொடுத்ததை அமைச்சர் மறந்துள்ளார். இதனையடுத்து தனது எண்ணிற்கு டயல் செய்து பார்த்த போதும் செல்போனை கண்டறியமுடியவில்லை ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதால் செல்போனை சைலண்ட் மோடில் அமைச்சர் போட்டுள்ளார். 

உதவியாளர் சட்டப்பையில் இருந்த செல்போன்

சிறிது நேரத்தில் தன் சட்டப்பையில் போன் இருப்பதை உணர்ந்த அமைச்சரின் உதவியாளர் போனை திருப்பி கொடுத்துள்ளார். எனவே அமைச்சர் செல்போனை யாரும் திருடவில்லையென்றும் ஞாபக மறதி காரணமாகவே சிறிது குழப்பம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அமைச்சரின் செல்போன் மீண்டும் கிடைத்தால் அமைச்சருடன் இருந்த போலீசாரும் மற்றவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.