தமிழகத்தைப் போல் ஆந்திராவிலும் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது.  மேலும், மதுக்கடைகள் இனி காலை 11 மணி முதல் இரவு 8 மணிவரை மட்டுமே திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், நாடு முழுவதுமே மதுவினால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதும், பாலியல் வன்முறைகளும் சமீப காலங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கிராம பகுதியில் அனுமதியில்லாமல் மது விற்கப்படும் சிறிய கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார்.

மேலும், மது விற்பனையில் மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில அரசு என்னென்ன விதி முறைகளை கடைபிடிக்கிறது என அதிகாரிகள் ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டார். இந்நிலையில், ஆந்திராவில் 4,377 மது விற்பனை செய்வதற்கான உரிமத்தை தனியாருக்கு அரசு வழங்கியிருந்தது. இந்த உரிமம் வழங்கப்பட்ட கடைகளுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து கலால் துறை முதன்மைச் செயலாளர் சாம்பசிவராவ் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, மாநிலம் முழுவதும் அரசே மதுபானங்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள மதுக்கடைகளில் 20 சதவீதம் குறைத்து, மதுக்கடைகளை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி 4,377 மதுக்கடைகளில், 876 கடைகள் குறைக்கப்பட்டு, 3504 கடைகள் அக்டோபர் 1ம் தேதி இன்று முதல் திறக்கப்படுகிறது. மேலும், ரூ.10 முதல் ரூ.250 வரை மது பாட்டில்கள் மீது கூடுதல் வரி ஆந்திர அரசு விதித்துள்ளது. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை கடை திறக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசே மதுபானங்களை விற்பனை செய்தாலும் கலால் துறைக்கு தொடர்பில்லாதவர்கள் பணியில் அமர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று இங்கும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.