திருப்பதி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தை சேர்ந்த கங்காதரம் என்பவர் குவாத்தில் இருந்து சென்னை திரும்பினார். அவரை அழைத்து செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு குடு்ம்பத்தினர் வந்தனர். பின்னர் வெளிநாட்டில் இருந்து வந்தவரை ஏற்றிக்கொண்டு கடப்பா மாவட்டம் நோக்கி கார் சென்றுக் கொண்டிருந்தது. 

அப்போது ரேணிகுண்டா மண்டலத்துக்குட்பட்ட மாமண்டூரு என்ற இடத்தில் எதிர்திசையில் இருந்து வந்த லாரி இன்று அதிகாலை அந்த காரின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கங்காதரம், அவர் மனைவி விஜயம்மா, சகோதரர் பிரசன்னா, பிரசன்னாவின் மனைவி மாரியம்மா, ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பின்னர் உயிரிழந்த 5 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.