ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த பயணங்களுக்கு அரசு நிதியை ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்வராக பதவியேற்று 62-வது நாளில் முதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஆந்திராவில் நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து அந்தக் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் முதலமைச்சராக பதவியேற்றார். முதல்வராக பதவியேற்ற பிறகு, தன் மாநிலத்துக்காகப் பல்வேறு சிறந்த திட்டங்களைக் கொண்டுவந்து, மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறார். கல்வி, விவசாயம், இளைஞர் நலன், வேலைவாய்ப்பு போன்ற பல திட்டங்கள் மூலம் ஆந்திரா மட்டுமல்லாது பிற மாநில மக்களின் ஆதரவையும் பெற்ற ஜெகன்மோகன் முதல்முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையுமான ராஜசேகர ரெட்டி, வருடத்துக்கு ஒருமுறை ஜெருசலேம், இஸ்ரேல் செல்வதை வழக்கமாகக்கொண்டிருந்தார். தன் தந்தையைப் பின்பற்றி, ஜெகனும் அவரது குடும்பத்தினரும் ஜெருசலேம் சென்றுள்ளனர். ஆந்திர முதல்வராகப் பதவியேற்ற பிறகு, ஜெகன் செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். 

இந்நிலையில், ஜெகன் மோகனின் ஜெருசலம் பயணத்துக்கு ரூ.22.52 லட்சத்தை ஆந்திர அரசு ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி அவரது குடும்பத்துடன் செல்லும் சொந்த பயணங்களுக்கு அரசு நிதி ஒதுக்குவது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.